சென்னை: மெட்ரோ ரயில் திட்டம் உள்பட பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை  சென்னை வரும் நிலையில், சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

பிரதமரின் நாளைய சென்னை நிகழ்வு, சென்ட்ரல் அருகே உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது,  , சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரையிலான மெட்ரோ ரயில் சேவை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரிவாயு திட்டம், காவிரி – குண்டாறு இணைப்பு, கல்லணை புனரமைப்பு மற்றும் பவானி நவீனப்படுத்தும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளும் நடைபெறும் என தெரிகிறது.

இந்த நிலையில், பிரதமர் வருகையையொட்டி, சென்னை முழுவதும் காவல்துறை கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும்,  சென்னை மெட்ரோ ரயில் சேவை, ஆவடி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாளை காலை 10.30 மணிக்கு விமானத்தில் சென்னை வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மெரினாவில் உள்ள அடையாறு ஐ.என்.எஸ். தளத்தை வந்தடைகிறார். அங்கிருந்து கார் மூலமாக விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்திற்கு வருகிறார். இதையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரு ஸ்டேடியம் வரை  வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளன.

மோடி வருகையையொட்டி, டெல்லியில் இருந்து வந்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள் நேரு ஸ்டேடியம் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அவர்களுடன் சென்னை மாநகர போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் சுமார்  10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பிரதமர் வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்திலும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

அதில்,  சென்னையில்  நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் செனனை பெருநகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை. மாநகர பஸ்கள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள்  திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

ராயபுரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராகிம் சாலை, மிண்ட் சந்திப்பு, பேசின்பாலம், எருக்கஞ்சேரிரோடு, அம்பேத்கார் சாலை, புரசைவாக்கம் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.

அண்ணா சாலையில் இருந்து ராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் ஸ்பென்சர் பென்னிரோடு, மார்ஸல் ரோடு, நாயர் பாலம், டவுட்டன் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.

சவுத்கெனால் ரோட்டில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.

வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.