சென்னை,
பாரம்பரியமான சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என தமிழக அரசு இழிவுபடுத்தக்கூடாது என்று பாமக தலைவர் ராமதாஸ் தமிழக அரசுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் போலி மருத்துவர்களால் அதிகளவு உயிர்கள் போவதாகவும், டெங்கு போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள போலி மருத்துவர்களை தமிழக அரசு களையெடுத்து வருகிறது.
இந்நிலையில், பாரம்பரிய சித்த மருத்துவர்களையும் போலி மருத்துவர்களாக சித்தரித்து கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இதற்கு சித்த மருத்துவர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் போதிய ஒழுங்குமுறைகளை ஏற்படுத்தி பாரம்பரிய சித்த மருத்துவர்கள் எந்த வித தடையுமின்றி, பாரம்பரிய மருத்துவம் செய்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், அவர்கள் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“தமிழ்நாட்டில் போலி மருத்துவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை வரவேற்கத்தக்கவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், களைகளை அகற்றும்போது பயிர்களும் பிடுங்கப்படுவதைப் போன்று, போலி மருத்துவர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளில் பாரம்பரிய சித்த மருத்துவர்களும் திட்டமிட்டு பழிவாங்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் போலி மருத்துவர்கள் இருப்பதும், எத்தனை முறை நடவடிக்கை எடுத்தாலும் அவர்கள் மீண்டும் மீண்டும் வெவ்வேறு இடங்களில் மருத்துவம் செய்து வருகின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் போலி மருத்துவர்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமுமாகும்.
போலி மருத்துவர்களைத் தேடித் தேடி நடவடிக்கை எடுப்பது ஒருபுறமிருக்க, அவர்கள் உருவாவதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை அகற்ற வேண்டியது அவசியமாகும். கிராமப்புறங்களிலும், மருத்துவச் சேவை கிடைக்காத பகுதிகளிலும் தான், மருத்துவர்களிடம் உதவியாளர்களாக பணியாற்றியவர்களும், மருந்துக்கடைகளில் பணியாற்றி அரைகுறை அனுபவம் பெறுபவர்களும் போலி மருத்துவர்களாக உருவெடுக்கின்றனர்.
வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பதைப் போன்று மருத்துவ சேவை வழங்குவதில் ஏற்படும் வெற்றிடம் தான் போலி மருத்துவர்களை உருவாக்குகிறது என்பதால் அந்தக் குறைபாட்டை போக்க வேண்டும்.
போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போது, பாரம்பரிய சித்த மருத்துவர்களையும் போலி மருத்துவர்களாக சித்தரித்து கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணனும் கூறும் காரணங்கள் அபத்தக் களஞ்சியங்கள் ஆகும்.
சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே சித்த மருத்துவர்களாக கருதப்படுவார்கள் என்றும், பட்டம் பெறாத பாரம்பரிய சித்த மருத்துவர்கள் அனைவரும் போலி மருத்துவர்கள் ஆவர் என்றும் விஜயபாஸ்கர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
விட்டால் அகத்தியரைக் கூட போலி மருத்துவர் என்று இவர் முத்திரை குத்துவார்.
ஆங்கில மருத்துவம் என்பது ஆராய்ச்சி வழி வந்தது… சித்த மருத்துவர் அனுபவத்தின் வழி வந்ததாகும். சித்தர் வழி வந்தவர்கள் தான் பாரம்பரிய சித்த மருத்துவம் செய்து வருகின்றனர். ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது என்று கைவிடப்பட்ட நோய்கள் கூட சித்த மருத்துவத்தில் குணப்படுத்தப்பட்ட வரலாறு உண்டு.
எழுதப் படிக்காதவர்கள் கூட சித்த மருத்துவத்தில் வல்லுனர்களாக உள்ளனர். இவர்கள் மக்களின் நம்பிக்கையை பெற்றவர்களாக உள்ளனர். அதேநேரத்தில் சில சித்த மருத்துவர்கள் குணப்படுத்த முடியாத நோய்களையும் குணப்படுத்துவதாகக் கூறி மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுகின்றனர்.
நோயால் பாதிக்கப்பட்டு ஏதேனும் அதிசயம் நிகழாதா? என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு தவறான நம்பிக்கையைக் கொடுத்து அவர்களிடம் பணம் பறிப்பது தான் இத்தகைய மருத்துவர்களின் நோக்கம் ஆகும். சில பேராசைப் பிடித்தவர்கள் செய்யும் இத்தகைய மோசடிகளைக் கருத்தில் கொண்டு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்ட பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலிகள் என்று முத்திரைக் குத்தக்கூடாது.
டெங்குக் காய்ச்சலை தடுக்கும் சக்தியாக போற்றப்படும் நிலவேம்பு கசாயத்தை தயாரித்தவர்களும், பப்பாளி இலைச்சாறு இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பதைக் கண்டுபிடித்தவர்களும் சித்தர்கள் தானேயன்றி, சித்த மருத்துவர்கள் அல்ல.
சித்த மருத்துவர்கள் சித்த மருத்துவத்தை படித்து ஏட்டறிவின் அடிப்படையில் வழங்குகின்றனர்; பாரம்பரிய சித்த மருத்துவர்கள் சித்த மருத்துவத்தை பரம்பரை பரம்பரையாக கற்று அந்த அனுபவத்தின் அடிப்படையில் மருத்துவம் செய்கின்றனர்.
இந்த இரு பிரிவினருக்கும் இது தான் வித்தியாசமாகும். பாரம்பரிய சித்த மருத்துவர்களின் வாரிசுகளுக்கு அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பாரம்பரிய சித்த மருத்துவர்களின் அனுபவம்-சேவையைக் கருத்தில் கொண்டு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை போலி மருத்துவர்கள் என விமர்சிப்பது சித்த மருத்துவத்தை அவமதிக்கும் செயலாகும்.
மத்திய அரசால் கடந்த 1970-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய மருத்துவத்திற்கான மத்தியக் கவுன்சில் சட்டத்தின்படி சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே மருத்துவம் செய்ய வேண்டும் என்பதும் உண்மை தான்.
எனினும் 1997-ஆம் ஆண்டு நண்பர் ஆற்காடு வீராசாமி அவர்கள் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது மத்திய அரசின் சட்டத்திலிருந்து பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் சித்தமருத்துவ முறை (வளர்ச்சி மற்றும் மருத்துவர் பதிவு) சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
இதன்படி பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு தொழில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால், அச்சட்டம் செல்லாது என 2009-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்க இரு திராவிடக் கட்சிகளும் தவறியது தான் இப்போது ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாகும்.
சித்த மருத்துவம் தமிழ் மருத்துவம் எனும் நிலையில் அதை பாரம்பரியமாக, நேர்மையான முறையில் செய்து வருபவர்களுக்கு தொழில்பாதுகாப்பு வழங்க வேண்டும். சீனாவில் பாரம்பரிய மருத்துவர்கள் அங்கீகரிக்கப்பட்டு கிராமங்களில் மருத்துவம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
விருப்பமுள்ளோருக்கு அடிப்படை ஆங்கில மருத்துவப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு அதையும் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோன்று தமிழகத்திலும் போதிய ஒழுங்குமுறைகளை ஏற்படுத்தி பாரம்பரிய சித்த மருத்துவர்கள் எந்த வித தடையுமின்றி, பாரம்பரிய மருத்துவம் செய்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.