டில்லி
கொரோனா பரவல் அதிகரிப்பால் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி விசாரணைகளை 3 மாதம் ஒத்தி வைக்க வர்த்தகர்கள் நிதி அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தியாவில் பிப்ரவரி இறுதி முதல் கொரோனா இரண்டாம் அலை தாக்குதல் தொடங்கி உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதல் இடத்தை எட்டி உள்ளது. நேற்று வரை 1,76 கோடி பாதிக்கப்பட்டு 1.97 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1.45 கோடி பேர் குணம் அடைந்து தற்போது 28.75 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
பல மாநிலங்களிலும் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல வர்த்தக நிறுவனங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு வருமானம் அடியோடு நின்றுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இவர்கள் மீது முன்பு தொடுத்துள்ள ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி விதி மீறல் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அகில இந்திய வர்த்தகர்கள் சம்மேளனம் என்னும் அமைப்பில் சுமார் 8 கோடி வர்த்தகர்கள் இணைந்துள்ளனர். இவை தவிர சுமார் 40000 சிறு வணிகர்கள் சங்கங்களும் இதே அமைப்பில் இணைந்துள்ளன. இந்த அமைப்பு தற்போது நிர்மலா சீதாராமனுக்கு ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி விதி மீறல் நடவடிக்கைகள் குறித்து ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பி உள்ளனர்.
அந்த கடிதத்தில், “தற்போது கொரோனா பரவல் அளவுக்கு மீறி அதிகரிப்பதால் மாநில அரசுகள் முழு ஊரடங்கு, இரவு ஊரடங்கு, 72 மணி நேரக் கதவடைப்பு, முழு கதவடைப்பு, தடை செய்யப்பட்ட பகுதிகள் எனப் பல விதங்களில் வர்த்தக நிறுவனங்களை மூடச் செய்கின்றன. எனவே தற்போதைய நிலையில் வர்த்தகர்களால் சட்ட பூர்வ நடவடிக்கைகள் எடுக்க முடியாமல் உள்ளோம்.
தற்போது டில்லியில் மட்டும் இந்த ஊரடங்கால் தினசரி ரூ.600 கோடி வர்த்தக இழப்பு ஏற்படுகிறது. அனைத்து இந்தியாவிலும் கணக்கெடுத்தால் அது ரூ.30,000 கோடியைத் தாண்டுகிறது. தற்போது வரும்,மான வரி செலுத்த இறுதி தேதியை ஜூன் 30 வரை ஒத்தி வைத்தது எங்களுக்குச் சற்று நிம்மதி அளித்துள்ளது. அவ்வகையில் அனைத்து ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி விதிமீறல் விசாரணைகளையும் 3 மாதங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]