500 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னராட்சி காலத்தில் இழைக்கப்பட்ட தவறை இப்போது மக்களாட்சியில் சரி செய்துள்ளதாக ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் பெருமிதத்துடன் கூறிவருகின்றனர்.

அதேவேளையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதை அடுத்து தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாக அங்குள்ள வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

அயோத்தியில் புதிதாக ராமர் கோயில் கட்டப்பட்டதை அடுத்து ஏற்கனவே கோயிலைச் சுற்றி இருந்த கடைகள் தவிர அயோத்தி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான கடைகள் மற்றும் வீடுகள் அகற்றப்பட்டன.

கோயிலுக்குச் செல்ல நகரின் பல்வேறு இடங்களில் இருந்தும் அகலமான சாலைகள் அமைக்க இந்த நிலங்களை கையகப்படுத்திய அரசு அங்கிருந்த கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தளங்களை இடித்ததோடு கடைகள் மற்றும் வீடுகளையும் இடித்தது.

இதனால் வாழ்வாதாரம் இழந்த ஆயிரக்கணக்கான அயோத்தி வாழ் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

ராமர் கோயிலுக்காக தனக்கு வாழ்வளித்து வந்த கடையை இழந்த சிலர் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அயோத்தி குலைலா மார்க்கெட் பகுதியில் இருந்த கடைகளில் 32 கடைகள் 2022 நவம்பர் மாதம் இடிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளனர்.

கௌசல்யா என்ற பெண் கூறுகையில், “நாங்கள் கடைகளை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றபோது இரவோடு இரவாக எங்கள் கடைகள் புல்டோசர்களைக் கொண்டு இடிக்கப்பட்டன. எங்களுக்கு எந்த முன் அறிவிப்பும் தரவில்லை. முன்கூட்டியே தெரிந்திருந்தால், எங்கள் கடையில் உள்ள பொருட்களை எடுத்திருக்கலாம்.

எங்கள் பொருட்களை எல்லாம் ராம் கதா அருங்காட்சியகத்தில் குவியலாகப் போட்டு வைத்திருந்தனர் 15 நாட்களுக்குப் பிறகு தான் அதை எங்களால் மீட்க முடிந்தது” என்று கூறினார்.

மேலும், “கடைக்கு அட்வான்ஸ் கொடுத்து 25 – 30 ஆண்டுகளாக வாடகைக்கு கடை வைத்திருந்த எங்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக உறுதி அளித்தனர்.

ஆனால், தற்போது கடைக்கு 20 முதல் 25 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று கூறுவதுடன் அதற்கு பல்வேறு நிபந்தனைகளும் விதித்து வருகிறார்கள்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

தெதி பஜார் சந்திப்பில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் நான்கு அடுக்கு வணிக வளாகத்தில் உள்ள 214 கடைகளில் பெரும்பாலான கடைகள் காலியாக உள்ளதாகவும் இது இவர்கள் ஏற்கனவே கடை வைத்திருந்த இடத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

இவர்கள் ஏற்கனவே வைத்திருந்த கடைகளை இடிக்கும் போது கடைக்கு தகுந்தாற்போல் 1 முதல் 1.5 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் மாற்று இடத்தில் கடை கட்டி தருவதாகவும் கூறிய நிலையில் தற்போது இதற்கான ஒதுக்கீடு கடிதம் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதில் தனக்கு ஒதுக்கப்பட்ட கடைக்கு ரூ. 24 லட்சம் கேட்கப்பட்டுள்ளதாக கூறிய புருஷோத்தம் என்ற மற்றொரு வியாபாரி தனக்கு இழப்பீடாக 1 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் இவ்வளவு பெரிய தொகை தன்னால் வழங்க முடியவில்லை என்று கூறினார்.

அயோத்தியில் ராமர் கோயிலுக்காக வாதாடிய இவர்கள் தற்போது ராமர் கோயில் அறக்கட்டளையின் நடவடிக்கையால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.