ஜூன் 15 அன்று நடந்த இந்திய-சீன தாக்குதலைத் தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென பல தரப்புகளில் கோரிக்கைகள் வலுத்துள்ளன.
ஏற்கெனவே சீன பொருட்களை பயன்படுத்தப்போவதில்லை என இந்திய ரயில்வே துறையும், பிஎஸ்என்எல் நிறுவனமும் முடிவுசெய்துள்ளன. மேலும் ரயில்வே பணிகளுக்காக சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. மறுபுறம், உள்நாட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சீனாவிலிருந்து இந்தியாவிற்காக இறக்குமதியாகும் பொருட்கள் பற்றி கணக்கெடுத்த போது தான் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு கவசங்கள் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் மூலப் பொருட்களை வைத்தே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரிய வந்துள்ளது.
2017-ஆம் ஆண்டில் 1.86 லட்சம் பாதுகாப்பு கவசங்களுக்காக எஸ்எம்பிபி பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்திடம் மத்திய அரசு ஆர்டர் கொடுத்தது. இக்கவசங்கள் தற்போது டெலிவரி செய்யப்படும் நிலையில் இருக்கிறன. இந்நிலையில், ராணுவத்தில் சீன பொருட்களை பயன்படுத்துவதை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென நிதி ஆயோக் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஓராண்டுக்கு முன்பிருந்தே பாதுகாப்பு கவசம் போன்ற முக்கிய பொருட்கள் தயாரிப்பில் சீனாவின் மூலப்பொருட்களை பயன்படுத்த வேண்டாமென டிஆர்டிஓ அறிவுறுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.
– லெட்சுமி பிரியா