சென்னை

மிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கழிவு சேமிப்பு கிடங்கு அமைக்கக்கூடாது என திமுக மக்களவை உறுப்பினர் டி ஆர் பாலு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அணுமின் உலை கழிவுகள் அப்புறப்படுத்தல் உலக அளவில் கடும் பிரச்சினையாக உள்ளது.   இந்த கழிவுகளால் மனிதர்களுக்கு கடும் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாழாவது உள்ளிட்ட பல நிகழ்வுகள் ஏற்படலாம் என அச்சம் உள்ளது.  இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் கழிவுகள் சேமிப்பு கிடக்கு அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  இதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இது குறித்து பிரதமர் மோடிக்கு திமுக மக்களவை குழு தலைவர் மற்றும் பொருளாளரான டி ஆர் பாலு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.  அதில் அவர், “ஏற்கனவே கூடங்குளம் அணு உலை கழிவுகள் கிடங்கு தொடர்பான வழக்கில் அணுமின் நிலையங்களில், நெடுங்கால உலைக்கழிவு பாதுகாப்பு சேமிப்பு கிடங்கு வசதிகள் விஷயத்தில் இந்தியாவுக்கு முன்அனுபவம் ஏதும் இல்லை என்று  இந்திய அணுசக்தி கழகம் 6.12.2017 அன்று சமர்ப்பித்த தனது  பதில் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

ஆகவே, இந்த உண்மைகளை எல்லாம் கருத்தில் கொண்டு, ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி முதல் இரண்டு அலகுகளின் கழிவுகளை ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்பி வைக்கவும், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திலேயே கழிவுகள் சேமிப்பு கிடங்கு அமைக்க  ஒன்றிய அரசின் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தால் தரப்பட்ட அனுமதியை ரத்து செய்து திரும்பப் பெற்றிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கூடங்குளம், கல்பாக்கம் உள்ளிட்ட   அனைத்து அணுமின் நிலையங்களின் பயன்பாடு முடிந்த அணுஉலை எரிபொருள் கழிவுகளைப் பத்திரமாகப் பாதுகாக்க நிரந்தர நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு உருவாக்கப்பட வேண்டும்.  இத்தகைய நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு ஒரு தேசிய முன்னுரிமை திட்டமாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மக்கள் வசிக்காத நிலப்பகுதியில் கட்டப்பட வேண்டும்.

இது சென்னை, புதுச்சேரி மற்றும் தென் தமிழகத்தில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாப்புடன் தொடர்புடைய அதிமுக்கியமான விஷயம் என்பதால் இதில் கடும் காலவிரயம் ஆகிவிட்டதை உணர்ந்து பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.