சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,000ஐ நெருங்கியது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் புதிய உச்சத்தை நோக்கி உயர்ந்துகொண்டு வருவது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலை இதுவரை இல்லாத அளவாக இன்று அதிரடி ஏற்றம் கண்டுள்ளது. கடந்த மாதம் இறுதியில் இருந்தே உயர்ந்து வரும் தங்கம் விலை, கடந்த 4ம் தேதி ஒரு சவரன் ரூ. 56,960க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது ரூ.57000 ஆயிரத்தை நெருங்கிய நிலையில், கடந்த 10 நாளில் மேலும் ரூ.1000 அளவுக்கு உயர்ந்து, ரூ.57000ஐ நெருங்கி உள்ளது.
தற்போது ஐப்பசி மாதம் என்பதால், முகூர்த்த நாட்கள் உள்ளது. அதனால் ஏராளமான திருமணங்கள் நடைபெறும். மேலும் கார்த்திகை மாதமும் அதிக அளவில் திருமணங்கள் நடைபெற்றும் இந்த நிலையில், தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒருசவரன் ரூ. 57,920க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.105க்கு விற்பனையாகிறது.
இன்று சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதுபோல, ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தை வர்த்தகத்தின் போது தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவிலும் தங்கத்தின் வலை வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது.
மேலும், தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர காரணம் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம், மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்த புவிசார் அரசியல் பதற்றம், வல்லரசு நாடுகளில் நிலவும் பொருளாதார மந்தநிலை மற்றும் உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் நாணய கொள்கைகள் குறிப்பாக ஐரோப்பிய மத்திய வங்கி நேற்று அறிவித்த வட்டி குறைப்பு போன்றவை என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். தங்கத்தின் விலை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.