சென்னை: இ-பாஸ் நடைமுறையில் சுற்றுலா பயணிகள் அவதியுறுவதுடன், அங்குள்ள வணிகர்களும் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில், பலர் ஊட்டி கொடைக்கானல் செல்வதை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இ-பாஸ் நடைமுறை உத்தரவு குறித்து மறுஆய்வு செய்ய தமிழக அரசு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத்தலங்களில் ஏற்படும் வாகன நெரிசலை கணக்கில்கொண்டு, உயர்நீதிமன்றம், அங்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தியது. இதற்கு அந்த பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்தாலும், சுற்றுலாவை நம்பி வாழும் வணிகர்கள், வாகன நிறுவனங்கள், லாட்ஜுகள், உணவகங்கள், சாலையோர வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்களின் வாழ்வாதாரம் பறிபோவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும், இ-பாஸ் நடைமுறையை கண்டித்து, ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில், நேற்று வணிகர்கள், வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் இபாஸ் எடுத்து அங்கு சென்ற சுற்றுலா பயணிகளும் கடும் அவதியடைந்தனர். ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் திறக்கப்படவில்லை. இதனால் உணவு கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்பட்ட வடை, போண்டா போன்றவற்றை வாங்கி சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஓடவில்லை. கடையடைப்பு காரணமாக பலர் விடுதிகளில் ரூம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். மேலும், இ-பாஸ் நடைமுறையால், ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் குறைந்தது.
இதுகுறித்து ஆலோசனை நடத்திய தமிழ்நாடு அரசு, ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட வாகன கட்டுப்பாடு உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.