கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை ரத்து செய்யப்பட்டது.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கொரோனா ஊரடங்கு காரணமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. பின்னர் ஆகஸ்டு மாதத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வந்தாலும் படகு சேவை தொடங்கப்படவில்லை.
ஆகையால் கன்னியாகுமரியில் சுற்றுலா தொடர்பான பொழுதுபோக்கு, வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. எனவே படகு சேவையை உடனடியாக தொடங்குமாறு சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.
கடந்த 10ம் தேதி நாகர்கோவில் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளுக்கான தடை ரத்து என்றும், விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தொடங்கும் என்றும் அறிவித்தார்.
அதன்பிறகு படகு போக்குவரத்து தொடங்க சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந் நிலையில், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை ரத்து செய்யப்பட்டது. புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக படகு சேவை ரத்து செய்யப்பட்டதாக பூம்புகார் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.