டில்லி

ரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள 24 நாட்கள் ரஷ்ய சுற்றுலாவைச் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

 

இந்தியாவில் சென்ற ஆண்டு மார்ச் முதல் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது.   இதனால் பாதிக்கப்பட்டுள்ள பல துறைகளில் சுற்றுலாத் துறையும் ஒன்றாகும்.  தற்போது ஒரு சில நாடுகளில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன.  ஆயினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்ல பயணிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தலைப் போக்க ஒரே வழி கொரோனா தடுப்பூசி மட்டும் தான் என ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.   இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசிக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இதையொட்டி பல மாநிலங்கள் சர்வதேச அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இதில் மேலும் ஒரு படி சென்று இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ரஷ்ய கொரோனா தடுப்பூசி சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளனர்.  இதன்படி டில்லியில் இருந்து மாஸ்கோ சென்று அங்கு இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மாஸ்கோவில் 20 நாட்கள், செயிண்ட் பீட்டர்ஸ் பர்கில் 4 நாட்கள், நட்சத்திர ஓட்டலில் அறை, ஸ்புட்னிக் வி தடுப்பூசி 2 டோஸ் என அனைத்துக்கும் நபர் ஒன்றுக்கு 2.2 – 2.4 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்..   இந்த சுற்றுலாவில் கலந்து கொள்வோர் கிளம்பும் முன்பு கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்னும் சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயமாகும்.