புதுடெல்லி: கொரோனா முடக்கத்தின் விளைவால் அதிகம் பயன்படுத்தப்பட்ட ‘ஸும்’ செயலியால், அதைப் பயன்படுத்திய 75% பயனர்கள், ‘ஸும் பதற்றம்’ எனப்படும் ஒருவகை மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில், வீட்டிலிருந்து பணிசெய்வோர் மொத்தம் 2000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.
ஸும் பயன்பாட்டின் மூலம், ஒருவருக்கு ஏற்படும் உடல் & மனரீதியான பாதிப்புகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொரோனா முடக்கத்தால், பணியிடங்கள் தவிர, பள்ளி & கல்லூரிகளிலும் அந்த செயலி பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பலபேருக்கு இந்த செயலி புதிதாக இருந்தது. எனவே, தொடர்பின்போது அது துண்டிக்கப்பட்டால், அதை எவ்வாறு சரிசெய்வது என்பதில் பலர் பதற்றத்திற்கும் கவலைக்கும் அடிக்கடி ஆளாயினர். இப்படியான நிலைமைக்கு ஆளானோர் சுமார் 80% பேர்.
தொழில்நுட்பம் குறித்து அவர்கள் பெற்றிருந்த குறைந்த அறிமுகமே இதற்கு காரணம். மேலும், அழைப்பவரின் உடல் மொழியை அறியமுடியாமல் போனதும் இதன் இரண்டாவது மிகப்பெரிய பிரச்சினையாக ஆகிப்போனது.
தமது கருத்து கேட்கப்படாமல் போவது, பல பேர் ஒரேசமயத்தில் கலந்துகொள்வது மற்றும் கேமராவின் முன்னால் தெரியக்கூடிய தனது தோற்றம் உள்ளிட்ட பல விஷயங்கள், பங்கேற்பாளர்களை பாதித்தன என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.