சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய விட்டு விட்டு இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்தன. இதன் காரணமாக 35 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு கோடை வெயிலையும் பொருட்படுத்தால் கோடை மழை மாநிலம் முழுவதும் கொட்டி வருகிறது. கடந்த சில வாரங்களாக டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் பெய்து வந்த மழை தற்போது வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் பெய்து வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த இரு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று மாலை பல பகுதிகளில் மழை பெய்த நிலையில் இரவும் விட்டுவிட்டு மழை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை மாதவரம், பெரம்பூர், எழும்பூர், கோயம்பேடு, அண்ணாசாலை, கிண்டி,மந்தைவெளி, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயப்பேட்டை விருகம்பாக்கம், கே.கே.நகர், வடபழனி, ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி, தாம்பரம் என பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், இன்று சென்னை மேகமூட்டமாக குளிர்ச்சி நிலையில் காணப்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக மோசமான வானிலை நிலவி வருவதால், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலையில் சிக்கி தவித்து வருகின்றன. டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, மதுரை, திருச்சி, கோழிக்கோடு, கோவா, ஐதராபாத், கோலாலம்பூர், சிங்கப்பூர் விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியவில்லை. இதன் காரணமாக17 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்தன. இதனால் சென்னை விமான நிலையத்தில் 35 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டிய 17 விமானங்கள், புறப்பட வேண்டிய 18 விமானங்கள் தாமதத்தால் பயணிகள் தவித்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து அபுதாபி, துபாய், கோலாலம்பூர், சிங்கப்பூர், டெல்லி செல்லும் விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிநாடு செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.