தெற்கு பசிபிக் மகா சமுத்திரத்தில் உள்ள டோங்கா தீவுகளுக்கு அருகே கடந்த சனிக்கிழமை அன்று ஏற்பட்ட எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இதுவரை உறுதியாக எதுவும் தெரியவில்லை.

எரிமலை வெடிப்பால் அந்த பகுதி முழுவதும் கடல் பரப்பில் சாம்பல் போர்த்தியது போல் உள்ளதால் கப்பல் மூலம் அதன் அருகில் சென்று ஆய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

160 க்கும் மேற்பட்ட சிறு சிறு தீவுகளை உள்ளடக்கிய டோங்கா நாட்டில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர், பிஜி தீவுகளுக்கு சுமார் 800 கி.மீ தென் கிழக்கே அமைந்துள்ள இந்த தீவிற்கான தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்துக்கு வட கிழக்கே 2300 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் டோங்காவைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் நியூஸிலாந்தில் வசிக்கிறார்கள்.

பூகம்பம் மற்றும் சுனாமி ஆகியவற்றின் செயற்கைகோள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆகியவற்றின் மூலம் இங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படும் நிலையில், இந்த பகுதியை போர் விமானங்கள் மூலம் ஆய்வு செய்ய நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்திருக்கிறது.

நேற்று அந்த பகுதியை நியூஸிலாந்து விமானங்கள் ஆய்வு செய்த போது பூகம்பத்தால் வெளியான சாம்பல் கடல்பரப்பில் பரவி இருந்ததோடு பூமியில் இருந்து சுமார் 19000 அடி உயரத்திற்கு புகைமண்டலமாக காட்சியளித்ததாக கூறி முயற்சியைக் கைவிட்டனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் ஆய்வு செய்யும் நியூஸிலாந்து அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர், உணவு மற்றும் மருந்து பொருட்களையும் கப்பல் படையையும் தயாராக வைத்துள்ளது.