திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 3ந்தேதி கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா ஆரம்பமானது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசித்து செல்கின்றனர். நாளை மலையில்  மகா தீபம் ஏற்றப்படுகிறது.
பஞ்ச பூதத்தலங்களில் அக்னிஸ்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணாமலை என்பது ஐதிகம்.
இத்தலத்தில் சிவபெருமான் ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே, கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறது.

நாளை மகா தீபத்தை முன்னிட்டு,  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்.  அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும்.  இதனை முன்னிட்டு திருவண்ணாமலை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மகாதீபத்தையொட்டி   அதிகாலை 2மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகர் சமேத வள்ளி தெய்வாணை, அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
பின்னர் அதிகாலை காலை 4மணி அளவில் அண்ணாமலையார் மூல கருவறையில் கற்பூர தீபமேற்றி, சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத, வேதமந்திரங்கள் முழங்க அந்த கற்பூர தீபத்திலிருந்து ஒரு மடக்கில் நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டு பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்படும்.
நாளை  மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றும் வைபவம் நடைபெறுகிறது.

நாளை தீப விழாவில் கலந்துகொள்ள லட்சக்கணக்கனா பக்தர்கள் திருவண்ணாமலை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி  தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாளை தீப திருவிழாவையொட்டி ஏராளமான சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இருந்து திருவண்ணாமலைக்கு செல்கிறது.
விழாவிற்கு வரும் பக்தர்களுக்காக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விழாவையொட்டி 10,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 16 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.