சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நாளை   காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர். இதையடுத்து, மூத்த காங்கிரஸ் தலைவர்களான  ரந்திப்சிங்  சுர்ஜிவாலா, முன்னாள் கேரள முதல்வர் உம்மன்சாண்டி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், ஆகியோர் சென்னையில் முகாமிட்டு உள்ளனர். இன்று மாலை,  மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

நாளை திமுக தலைமையுடன் நடைபெற உள்ள தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு திமுக எத்தனை தொகுதிகள் ஒதுக்கும் என்பது குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு மற்றும் அரசியல் பேரங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், கடந்த 2019ம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியே தொடரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனால், சமீபகாலமாக நடைபெற்று வரும் அரசியல் களேபரங்கள் கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம் என்றும், 3வது அணி, 4வது அணி என மேலும் பல அணிகள் உருவாக வாய்ப்பு இருப்பதுபோன்ற தோற்றத்தையும் உருவாக்கி உள்ளது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, தொகுதிப்பங்கீடு குறித்து நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது.  திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையுன்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட மூத்தநிர்வாகிகளுடன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களான காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்திப் சுர்ஜேவாலா, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டுராவ், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகி உள்பட மூத்த நிர்வாகிகளும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையின்போது, திமுக தரப்பில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 20 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க இருப்பதாக அறிவாலயம் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதை காங்கிரஸ் கட்சி ஏற்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு  41 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 8 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. அத்துடன் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில்  180 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், தற்போதைய தேர்தலிலும் திமுக 180 தொகுதிகளில் தனித்து  களமிறங்க  முடிவு செய்துள்ளதுடன்,  கூட்டணி கட்சிகளுக்கு  குறைந்த அளவிலான தொகுதிகளையே ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள திமுக, காங்கிரஸ் கட்சி இடையேயான தொகுதி பங்கீட்டில், காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதி கிடைக்கும் என்பது பெருத்த எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுக 180 தொகுதிகளிலும்,  காங்கிரஸ் கட்சிக்கு  20 தொகுதிகளிலும் , சிபிஎம் 8 தொகுதிகள், சிபிஐக்கு 8 தொகுதி கள், மதிமுகவுக்கு 8 தொகுதிகள்,  விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6 தொகுதிகள், முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்கு மக்கள்  கட்சிக்கு 2 தொகுதிகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 2  தொகுதிகள் மற்றும் சில கூட்டணி கட்சிகளுக்கு மீதமுள்ள தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணி கலாட்டா-3: கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரசுக்கு நெருக்கடி…