கொழும்பு
இலங்கை அதிபர் விக்ரமசிங்கே நாளை 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார்.
இலங்கை அதிபர் விக்ரமசிங்கே இந்திய ரூபாயை அமெரிக்க டாலருக்குப் பதிலாக பொதுப் பணமாகப் பயன்படுத்த விரும்புவதாக சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம். தெரிவித்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 20, 21-தேதிகளில் (நாளை, நாளை மறுதினம்) அரசுமுறை பயணமாக இந்தியா வருகிறார். அதிபரது இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் முன்னேற்றுவதையும், உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது” என்று கூறப்பட்டுள்ளது.
விக்ரமசிங்கே இலங்கை அதிபராகப் பொறுப்பேற்ற பின்பு, முதல் முறையாக இந்தியாவுக்குப் பயணம் செய்கிறார். விக்ரமசிங்கே தனது சுற்றுப்பயணத்தின்போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து பேசுகிறார். பிரதமர் மோடி மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகளுடனும் இருதரப்பு பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்கள் குறித்துக் கலந்துரையாடுகிறார்.
கடுமையான நிதி நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவித்தபோது அதிபராகப் பதவியேற்ற அவர், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு உதவிகளைப் பெற்றார். மேலும் சர்வதேச நிதியம் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கவும் இந்தியா சம்மதம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.