சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு, தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட உள்ள நிவாரண பொருட்கள் சென்னையில் இருந்து நாளை அனுப்பிவைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டில் வரலாறு காணாத விலையேற்றம் ஏற்பட்டது. அத்தியாவசியப் பொருட் களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன மேலும் எரிபொருள், மருந்துகள் மற்றும் மின்சார விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, கடந்த ஏப்ரல் 9 முதல் ஆயிரக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர்.
இதற்கிடையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்க இந்தியஅரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இதை யடுத்து தமிழகஅரசும் உதவ முன்வந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களிடம் நிதி கோரினார். இதைத்தொடர்ந்து பல நிறுவனங்கள் உள்பட அரசியல் கட்சியினர், எம்பி., எம்எல்ஏக்கள் சம்பளம் என பல பகுதிகளில் இருந்து நிதி குவிந்து வருகிறது.
அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் நிவாரணப் பொருட்கள் நாளை (மே 18) சென்னையிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
சென்னையிலிருந்து கப்பல் மூலம் ரூ. 80 கோடி மதிப்பில் 40,000 டன் அாிசி, ரூ. 15 கோடி மதிப்பில் 500 டன் பால் பவுடர், ரூ. 28 கோடி மதிப்பில் 137 டன் மருந்து பொருள்கள் நாளை காலை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
[youtube-feed feed=1]