சென்னை: நாளை சனிப்பெயர்ச்சி நடைபெறுவதையொட்டி, சனி ஸ்தலமான திருநள்ளாறு உள்பட சனிபகவான் கோவிலில் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிபகவான்  2020 டிசம்பர் 27ஆம் தேதி தனுசு ராசியிலிருந்து தனது சொந்த வீடான 10ஆம் வீட்டிற்கு அதாவது மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகி பலம் பெறுகிறார். இவர் இரண்டரை ஆண்டுகள் இந்த ராசியில் இருப்பார். இந்தப் பெயர்ச்சி அதிகாலை காலை 5.22 மணிக்கு நடக்கிறது. 

காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனிபகவான் கோவில் உள்ளது. இது பிரசித்தி பெற்ற சனி ஸ்தலமாகும்.  இந்த கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சனிபகவானை தரிசனம் செய்வார்கள்.

ஆனால், இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு விழா நடத்தப்படும் என்றும் பக்தர்கள்  முககவசம், சமூக இடைவெளி கட்டாயம் என்பதுடன்,  ஆன்லைன் முன்பதிவு செய்து இருந்தவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், வழுவூர், திருக்கொள்ளிக்காடு, திருநாறையூர்  உள்பட சிவன்கோவில்களில் உள்ள சனிபகவான் மற்றும் நவரக்கிரகள் அமையப்பெற்றிருக்கும் அனைத்து கோவில்களிலும் நாளை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.