சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலை  திமுக கூட்டணியுடன் எதிர் கொள்ளும் காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  எந்தெந்த தொகுதிகள் என்பது  குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களாக போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.

இதுவரை 249 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து நாளை ஆய்வு நடைபெற இருப்பதாக  அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சமர்ப்பிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் விருப்ப மனுக்களை ஆய்வு செய்ய மாநில தேர்தல் குழு கூட்டம், தமிழநாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற இருப்பதாகவும், அதைத்தொடர்ந்து பகல் 1 மணி அளவில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், காங்கிரஸ் கட்சி  திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது.