சென்னை,
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான நீட் பொது நுழைவுத்தேர்வு நாளை நடைபெறுகிறது.
நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி தேர்வு பெற வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இந்நிலையில் நாளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) நடத்தும் இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 11.35 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
இந்த ஆண்டு முதல் தமிழக மாணவர்களும் நீட் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். முதுகெலும்பில்லாத தமிழகஅரசின் மெத்தனம் காரணமாக, தமிழகத்தில் உள்ள சுமார் 2500 மருத்துவ இடங்கள் வெளி மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
தமிழகத்தில் பாடத்திட்டங்கள் சிபிஎஸ்சிக்கு இணையாக மாற்றாதவரையில், தமிழக மாணவர்கள் இதுபோன்ற அகில இந்திய தேர்வுகளை எதிர்கொள்ள கடுமையாக போராட வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
நாளை நடைபெற இருக்கும் மருத்துவ நுழைவு தேர்வில் தமிழகத்தில் இருந்து 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத இருக்கின்றனர்.
இதற்காக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 இடங்களில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு மாநில மொழிகளிலும் நடைபெறுகிறது. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், அஸாமி, வங்காளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா ஆகிய 10 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது.
அடுத்த ஆண்டில் இருந்து உருது மொழியிலும் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேள்வி விவரம்:
இந்த தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என நான்கு பாடங்களில் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும்.
ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்குத் தேர்வு நடை பெறும்.
ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்தால் 4 மதிப்பெண் வழங்கப்படும். அதே சமயம், தவறான பதில் அளித்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும் (Negative marking).
ஒரே கேள்விக்கு பல பதில்களை அளித்தாலும், அது தவறான பதிலாகவே கருதப்படும்.
ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வை எழுத முடியும். இடஒதுக்கீடு பெறும் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 30 வயதுக்குள் மூன்று முறையும், பிற மாணவர்கள் 25 வயதுக்குள் 3 முறையும் நீட் தேர்வை எழுத முடியும்.
தேர்வு நேரம்:
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும்.
மாணவர்கள் காலை 7.30 மணிக்குத் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.
தேர்வு எழுதுவதற்கான அனுமதி அட்டை காலை 9.45 மணி வரை சோதனை செய்யப்படும்.
மாணவர்கள் 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
எப்படி செல்ல வேண்டும்?
மாணவர்கள் மொபைல் போன்கள், கைக்கடிகாரங்கள், கைப்பை, கால்குலேட்டர், கேமரா, பென் டிரைவ், ஹெட்போன் உள்ளிட்ட எவ்விதமான எலெக்ட்ரானிக் பொருள்களையும் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக்கூடாது.
தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மற்றும் அனுமதி அட்டையின் இரண்டாவது பக்கத்தில் ஒட்ட வேண்டிய அஞ்சல் அட்டை அளவு புகைப்படம் ஆகியவற்றை மறக்காமல் எடுத்துச்செல்லுங்கள்.
தேர்வை நீல நிறம் அல்லது கருப்பு நிற பால் பாயின்ட் பேனாவைக் கொண்டே எழுத வேண்டும்.
மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான பேனா தேர்வுக் கூடத்திலேயே வழங்கப்படும்.
மாணவர்களின் உடை, செருப்பு முதல் அனைத்தும் தீவிரக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும். தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உடை விவரம்:
நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் ஷூ, முழுக்கை சட்டை, டி – சர்ட், பெல்ட், கைக்கடிகாரம், குளிர் கண்ணாடி, செயின், மோதிரம், பிரேஸ்லெட் போன்றவை அணியக்கூடாது.
மாணவிகள் புடவை, வளையல்கள், பர்தா, தொப்பி, பைஜாமா, குர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெக்லஸ் , தலையில் மாட்டும் கிளிப்புகள், பெரிய அளவு பட்டன்கள், பேட்ஜ், பெரிய அளவிலான ரப்பர் பேண்டுகள்,ஆகியவை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அரைக்கை சட்டை, செருப்பு, கால்சட்டை (பேன்ட்), ஜீன்ஸ் கால்சட்டை, மருத்துவர்கள் பரிந்துரைத்த கண் கண்ணாடி, லெக்கின்ஸ், சுடிதார், சிறிய அளவு ரப்பர் பேன்ட் ஆகியவற்றுக்கு மட்டுமே தேர்வுக்கூடத்துக்குள் அனுமதி உண்டு.
திருமணமான பெண்கள் தாலி மற்றும் வளையல் அணிந்து கொள்ளலாம்.
இவ்வாறு சிபிஎஸ்இ பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.