சென்னை: மே1ந்தேதி தொழிலாளர்கள் தினத்தையொட்டி நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு தமிழகஅரசு விடுமுறை அறிவித்து உள்ளது.
தமிழக அரசுக்கு வருவாய் கொடுக்கும் நிறுவனங்களில் டாஸ்மாக் முதலிடத்தில் உள்ளது. பொதுவாக விடுமுறை நாட்களில் மதுபானக்கடைகளில் கூட்டம் அலை மோதுவது வாடிக்கை. அதுவும் நாளை மாதத்தில் முதல்நாள் என்பதால் மாநிலம் முழுவதும் பலகோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனையாகும்.
ஆனால், தமிழகஅரசு, பண்டிகை நாட்கள், தேசியத் தலைவர்கள் பிறந்த நாள் உள்ளிட்ட நாட்களில், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, நாளை மே 1ந்தேதி என்பதால் நாடு முழுவதும் உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட உள்ளது.
இதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை நாளை ஒரு நாள் மட்டும் மூடும்படி டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கிளப்கள், ஹோட்டல் பார்கள் ஆகியவற்றில் மதுபானங்களை விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அனைத்து மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும், அரசின் உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்து உள்ளது. அன்றைய தினம் மதுபானங்களை கடத்துதல், மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது