நாளை 17வது நினைவு நாள்: காங்கிரஸ் தொண்டர்களின் கம்பீரம் வாழப்பாடியார்….

Must read

நெட்டிசன்:

சதா.வெங்கட்ராமன் பதிவு…

அண்ணன் சிவாஜி அவர்கள் அரசியலே’ வேண்டாம் என ஒதுங்கி இருந்தபோது மீண்டும் அரசியல் செய்ய வற்புறுத்திய நம் மன்றத்து மறவர்களை ……

நம்ம ராமு (வாழப்பாடியார் ) நல்ல அரசியல் பண்ணுறார் அவரோடு சேர்ந்து பண்ணுங்க அல்லது வேறு யாரோடு போறதா இருந்தாலும் போங்க அது உங்க விருப்பம் என்று சொன்னார்கள்

80 சதவிதம் பேர் வாழப்பாடியார் தலைமை ஏற்று காங்கிரஸில் இணைந்தனர்

ஒரு நாள் அன்னை இல்லத்திற்கு வருமாறு அண்ணன் சிவாஜி அவர்கள் வாழப்பாடியார் அவர்களை அழைத்தார்கள் அவரும் அன்னை இல்லம் வந்தார்

குடும்பத்தில் உள்ளவர்களை பற்றி நலம் விசாரித்துவிட்டு நம்ம பசங்க எல்லாத்தையும்  அழைச்சிகிட்டு எங்க தாடி (மாவீரன் V . ராஜசேகரன் அவர்கள் ) வந்துட்டான். எல்லோரையும் நல்லா வச்சிக்கோ… எங்க தாடிக்கிட்ட மட்டும் பத்து அடி தள்ளி நின்னு பேசு ( கிண்டலாக )… அவன் எதை எப்ப என்னா பண்ணுறானே புரிஞ்சிக்க முடியாது…  எதுசெஞ்சாலும் அது உன் நல்லதுக்குதான் செய்வான்…

வெளியுலக செய்தி எல்லாம் தெரிஞ்சி வைச்சிருப்பான் அவனை நல்லா பயன்படுத்திக்கோ….  என்ன முரட்டு பய… என்று சொல்லிக் கொண்டு இருந்தபோது,

வாழப்பாடியார்  அவர்கள்,   நீங்க வந்து இருந்தீங்க எனக்கு பெருமையாகவும் பலமாகவும் இருந்திருக்கும் என்று கூறினார்கள்.

உடனே கமலாம்மா அவர்கள், ராமு,  மாமாவுக்கு அரசியல் எல்லாம் சரிபட்டு வராது,  மாமா செஞ்ச அரசியல் எல்லாம் போதும்,  நீங்க உங்களை நம்பி வந்தவங்களை உதாசினம் செய்யாமல் உங்க ஆட்களாக தக்க வைச்சிக்கங்க….  அதுவே போதும் என்றார்கள்.

அதுபோலவே நம் மன்றத்து மறவர்களை அரவணைத்து சென்றார்கள் வாழப்பாடியார் அவர்கள்.

தினமும் அலுவலகம் வந்தவுடன் ராஜசேகரனிடம்…  இன்று ஏதேனும் சிறப்பு செய்தி உண்டா என்று கேட்பார்.

மாவீரன் V. ராஜசேகரன் அவர்கள் அன்றைய சூழலில் என்ன நடந்ததோ அதற்கு தகுந்தார்போல் பல செய்திகளை சொல்லி இதை இப்படி சொன்னால் நன்றாக இருக்கும் என்று சொல்லுவார்கள்.

இவை அனைத்தையும் கிள்ளிவளவன் அவர்கள் குறிப்பெடுத்து கொண்டு ஒரு அறிக்கையாக தயார் செய்வார். பின் அந்த அறிக்கை சரி பார்த்து பத்திரிக்கை நிருபர்களுக்கு வழங்கப்படும்.  மறுநாள் அந்த அறிக்கைகள் தமிழகமெங்கும் பரபரப்பாக பேசப்படும்.

அமரர் ராஜீவ் காந்திக்கு சென்னையில் சிலை அமைத்தவர்.  அதே போல் தஞ்சை மாவட்டம்  ஒரத்தநாட்டில் சிலை அமைக்க வழி வகுத்தவர் வாழப்பாடியார்.

அண்ணன் சிவாஜியைபோல் தொண்டர்கள் இல்ல விசேஷங்களில் தவறாது பங்கேற்பார்….

பட்டுக்கோட்டை பண்னைவயல் ராஜதம்பி சேர்வைகாரரின் தந்தையும், ஒரத்தநாடு தெலுங்குடிகாடு சைவராஜ் அவர்களின் தந்தையும்  இறந்த செய்தி கேட்டு பல நாட்கள் கழித்து துக்கம் விசாரிக்க வந்தார்கள். அன்று மதியம் தஞ்சை நகர காங்கிரஸ் தலைவர் S .A .அ மீது அவர்கள் வீட்டில் உணவு அருந்துவதாக ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது.

அமிதுபாய்,  வாங்க தலைவரே சாப்பிட…  என்று அழைத்தபோது, என்னுடன் வந்தவர்கள் எல்லாம் முதலில் சாப்பிடட்டும் கடைசியில் நான் சாப்பிடுகிறேன் என்றார்கள்…

அது போலவே அனைவரும் சாப்பிட்ட பிறகே வாழப்பாடியார் அவர்கள் சாப்பிட்டார்கள்…. பின் ஊருக்கு கிளம்பு போது நான் குலதெய்வத்திற்கு கோவில் கட்டுறேன் வந்து பாருங்கள் என்று அழைத்தார்.

நாங்கள் அனைவரும் உடன் சென்றோம். பெரம்பலூர் அருகே மிக பிரமாண்டமாக கோவில் கட்டி கொண்டு இருந்தார்கள்.  கோவிலை சுற்றி காட்டிக்கொண்டே ஒவ்வொரு சிலைகளையும் காண்பித்து அதன் பெயர் களையும் சொல்லிக் கொண்டே வந்தவர்,  எனக்கு சாமி கும்பிடுகிற பழக்கம் கிடையாது; என் பங்காளிகள் எல்லாம் குலதெய்வம் கோவிலை கட்ட வேண்டும் என்றனர்.

எல்அன்டி நிறுவனத்திடம் சொன்னேன்,  இரண்டு கோடி ரூபாய் கேட்டார்கள்,  பணத்தை கொடுத்து விட்டேன் எல்அன்டி நிறுவனம்தான் இதை கட்டி கொண்டு இருக்கிறது என்றார்கள்.

உடனே உடன் வந்தவர்கள்,  மொத்த செலவும் நீங்க செய்யக் கூடாது;  பங்காளிகள் மற்றும் பல பேரிடம் வசூல் செய்து கட்ட வேண்டும் என்றனர்/

அதற்கு வாழப்பாடியார் அவர்கள், என் பங்காளிகள் எல்லாம் இல்லாதவர்கள் அவர்களிடம் எப்படி பணம் கேட்பது என்று கூறினார்கள்.

அதுவே தஞ்சைக்கு வந்த கடைசி பயணம்.

சைக்கிளில் செல்லக் கூட வக்கில்லாதவர்களை வான்வெளியில் பறக்க செய்தவர், பல தொண்டர்களை செல்வந்தர்களாக ஆக்கிய பெருமை இவருக்குண்டு. ஆனால் இவரால் பயன் அடைந்தவர்கள் இவரை மறந்து விட்டனர்…

நம்மை போன்றவர்கள்தான் இந்த தொண்டர்களின் தலைவனை நினைவு கூர்கிறோம்…

வாழ்க அவரது புகழ்……

என்றும் பிரியமுடன்
சதா.வெங்கட்ராமன்
தஞ்சாவூர்

More articles

Latest article