சென்னை
நாளையுடன் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது
கடந்த ஆட்சியில் தமிழகத்தில் புதியதாகப் பிரிக்கப்பட்ட காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவின்படி வரும் 6 மற்றும் 9 தேதிகளில் இந்த தேர்தல்கள் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் 15ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.
நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைய உள்ளது. எனவே வேட்புமனு தாக்கல் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. நேற்று கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 24,607 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 6,864 வேட்பு மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,298 வேட்புமனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 202 வேட்புமனுக்களும் என 33,971 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நேற்று வரையில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 41,027 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 10,107 வேட்பு மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,683 வேட்புமனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 228 வேட்புமனுக்களும் என 54,045 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் வரும் 23 ஆம் தேதி அன்று பரிசீலனை செய்யப்பட உள்ளன.