நாளை ஜி எஸ் டி குழுக் கூட்டம் : பெட்ரோல் விலை ரூ.75 டீசல் விலை ரூ,68 ஆகக் குறையலாம்

Must read

டில்லி

நாளைய ஜி எஸ் டி குழு கூட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.  அப்போது இருந்தே கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோல் டீசல், விமான எரிபொருள் உள்ளிட்டவை ஜி எஸ் டி வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை.   மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாய் இதனால் குறையும் என்னும் காரணத்தால் அப்போது இத்தகைய முடிவு எடுக்கப்பட்டு அதே தொடர்ந்து வருகிறது.

தொடர்ந்து மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீது உற்பத்தி வரியை உயர்த்தி வருகிறது. தவிர சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் மத்திய அரசு ஆயத்தீர்வை வரியை அதிகரித்ததால் விலை மேலும் அதிகரித்தது.   தவிர மாநில அரசுகளும் வாட் வரி விதிப்பதால் விலை உயர்வு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.

தற்போது தலைநகர் டில்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101.19 எனவும் டீசல் லிட்டருக்கு ரூ.88.62 எனவும் விற்கப்படுகிறது.  பெட்ரோலுக்கு மத்திய அரசு உற்பத்தி வரியாக 32% மற்றும் மாநில அரசு வாட் வரியாக 23.07% விதிக்கப்பட்டுள்ளது.  இதைப் போல் டீசலுக்கு மத்திய அரசு 35% மற்றும் மாநில அரசு 14% வரி விதிக்கின்றது.   இது குறித்து கேரள நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர முடிவு எடுக்க வேண்டும் என அரசை கேட்டுக் கொண்டது.

லக்னோவில் நாளை அதாவது செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று ஜி எஸ் டி குழுக் கூட்டம் கூட உள்ளது.   இதில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி எஸ் டி வரம்புக்குள் கொண்டு வர ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.    இது அனைத்து மாநிலங்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டால் விலை குறைய வாய்ப்புள்ளது.  அவ்வாறு குறைக்கப்பட்டால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.68 என விற்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

More articles

Latest article