சென்னை,

மிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (மார்ச் 16) தொடங்குகிறது. பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி அரசின் முதல் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் குறிப்பு தீர்மானம் நிறை வேற்ற அவசர கூட்டம் கூட்டப் பட்டது.

அதைத்தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஓபிஎஸ் கட்டாயப்படுத்தப்பட்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சசிகலா முதல்வர் பதவியை பிடிக்க கடும் முயற்சி செய்தார். ஆனால், கவர்னர், அவர்மீதான வழக்கின் தீர்ப்பு வருவதை காரணம் காட்டி தவிர்த்தார்.

சசிகலாமீதான வழக்கில் அவருக்கு 4 ஆண்டு தண்டனை உறுதியானது. அதன் காரணமாக அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர் எடப்பாடி தமிழக முதல்வராக பதவி ஏற்றார்.

அதைத்தொடர்ந்து எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்ற பிப்ரவரி 18ந்தேதி சட்டசபை கூட்டப்பட்டது.  பயங்கர அமளியுடன் நடைபெற்ற அந்த கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் வெளியேற்றப்பட்டு, எடப்பாடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், நாளை (16ந்தேதி) முதல் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்றும், அன்றே  தமிழக பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நாளை தமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்க இருக்கிறது. காலை 10.30 மணிக்கு சட்டசபை கூடியதும், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

அதைதொடர்ந்து சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

நாளைக்கு கூட இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் அரசியல் பரபரப்பு மிகுந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபை அமளியில் சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டார் என்று அவர்மீது  நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வரவேண்டும் என்று சட்டசபை செயலகத்தில் தி.மு.க. சார்பில் ஏற்கனவே மனு கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக சபாநாயகர் தனபால், தன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்வாரா அல்லது தள்ளுபடி செய்வாரா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும்,  நிதியமைச்சராக பதவி ஏற்றிருக்கும்  ஜெயக்குமார் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.