வேலூர்

நாளை முதல்வர் வருவதால் வேலூரில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை வேலூரில் தி.மு.க பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற உள்ளது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

வேலூரை அடுத்த கந்தனேரியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே இதற்காகப் பிரமாண்ட கோட்டை வடிவிலான மேடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காகச் சென்னையில் இருந்து இன்று ரெயில் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்பாடி வருகிறார்.

அவர் இரவு வேலூர் அரசு சுற்றுலா மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் தங்குகிறார். முதல்வர் மு க் ஸ்டாலின் நாளை மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றுகிறார். முதல்வர் வருகையையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே வேலூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் சீல் வைக்கப்பட்டு இப்பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு வேலூர் பகுதியில் நாளை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் டிரோன்கள் மட்டுமின்றி பெரிய பலூன்கள் பறக்கவும் தடை விதித்துள்ளனர்.