'நாளை நமதே' பாடலுடன் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்!

Must read

சென்னை:
சென்னை மாநகராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.  இந்த மன்றத்தின் கடைசி கூட்டம் இதுவாகும்.
அடுத்த மாதம் உள்ளாட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் சென்னை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்றும், இன்றும் நடைபெற்று வருகிறது. நாளையும் தொடர்கிறது.
1chennai0803_01 1mayor-saidai-s-duraisamy
சென்னை மாநகர மேயராக பொறுப்பேற்ற சைதை துரைசாமி, தனது நிர்வாகத்தின்கீழ் நடைபெற்ற திட்டங்கள் பற்றிய சாதனை பட்டியலை இன்று மாமன்ற கூட்டத்தில் வாசித்தார்.
அப்போது, முதல்வர் ஜெயலலிதாவின் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களையும் பாராட்டி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.
மேலும் மாநகராட்சியின் வளர்ச்சி மற்றும் திட்டங்களை நிறைவேற்ற உதவி புரிந்த அனைத்து உறுப்பினர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோரை பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் சாலை, சாக்கடை கால்வாய், எல்.இ.டி. விளக்குகள் மற்றும் இதர பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.
மாநகராட்சி சொத்துகள் மற்றும் உடைமைகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு சிறப்பு தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் 80-வது வார்டு உறுப்பினர் ஜி.ஆர். சீனிவாசன், 63-வது வார்டு உறுப்பினர் சரோஜா ஆகியோர் மாநகராட்சியின் செயல்பாடுகளை பாராட்டும் வகையில் நாளை நமதே மற்றும் பசுமை நிறைந்த நினைவுகளே ஆகிய பாடல்களை பாடினார்கள். மேயர் துரைசாமியும் அவர்களுடன் சேர்ந்து  பாடலை பாடினார்.
இதனால் மன்றத்தில் கலகலப்பு நிலவியது.
சாதனை பட்டியல்…..!!…?
சென்னையில் மழை காலத்தில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் முன்னேற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளதாக மேயர் தகவல்.
ஐந்தாண்டுகளில் சென்னையில் பல சாலைகள், மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது.
சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு இல்லை என மேயர் தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து தவறான விமர்சனத்தை மேயர் தெரிவித்தாக கூறி தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய தி.மு.க. உறுப்பினர்கள், மாமன்ற கூட்டத்தில் மக்கள் பிரச்சனை குறித்து பேசாமல் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வருகின்றனர் என்றும், தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து தவறான விமர்சனங்களை மன்றத்தில் பேசி வருகின்றனர். எனவே நாங்கள் வெளிநடப்பு செய்கின்றோம் என்றனர்.
தொடர்ந்து அவர்கள் மக்கள் பிரச்சினை குறித்து பேச சிறிது நேரத்தில் கூட்டத்தில் கலந்து கொள்ளவதாக தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சி கூட்டம் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் முடிவடைய இருந்த சென்னை மாநகராட்சி கூட்டம் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு நாளையுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article