சென்னை: மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத் துறை சார்பில் நாளை (சனிக்கிழமை) மாபெரும் உண்ணாவிரத அறப் போராட்டம் நடைபெறவிருப்பதாக திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., தெரிவித்துள்ளார்.
இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா,பாரதிய நாகரிக் சுரக்ஷா மற்றும்பாரதிய சாக் ஷியா ஆகிய 3 சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த சட்டங்களை எதிர்த்து பல வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் இந்த சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பினர் திமுக எம்.பி. வில்சன் தலைமையில், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த வில்சன், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்டங்களையும் ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்திய பொதுநல மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதில், எவரோ ஒருவர் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவுஅளித்து விட்டது என இந்த விவகாரத்தை எடுத்துக் கொள்ள முடியாது.
இந்த விஷயத்தில், வழக்கறிஞர், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சஸ்பெண்ட் செய்து இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது, இருக்கிற சட்டங்களை எடுத்துவிட்டு உச்சரிக்க முடியாத மொழியில் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. அவசர அவசரமாக இந்த சட்டம் கொண்டு வந்து மத்திய அரசு என்ன சாதிக்க போகிறது என கேள்வி எழுப்பியவர், இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களையும் சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், திமுக சட்டத்துறை சார்பில் புதிய சட்டங்களுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து திமுக சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்திய திருநாட்டின் நீதி பரிபாலனத்திற்கும் – மாநில சுயாட்சிக்கும் – மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது என்பதோடு, இச்சட்டங்கள் ஜனநாயக நாடாக திகழும் நம் இந்திய திருநாட்டினை, ‘காவல்துறை ஆட்சி நாடாக” மாற்றிவிடும் அரசியல் அமைப்பிற்கு எதிரான – ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்றிய பாசிச பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறையின் சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளது.
திமுக சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., தலைமையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சார்பில் நாளை (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் மாநில, மாவட்ட, நீதிமன்ற திமுக. வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் – கழக வழக்கறிஞர்கள் மற்றும் கழக முன்னணியினர் – தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.
நாடு முழுவதும் இன்று முதல் அமலானது 3 புதிய குற்றவியல் சட்டங்கள்…