டில்லி

நாளை கூட உள்ள காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முழு நேரத் தலைவர் குறித்து முடிவு எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.  அதற்குப்  பொறுப்பேற்று அப்போதைய தலைவர் ராகுல் காந்தி பதவியை ராஜினாமா செய்தார்.   இந்த முடிவை மாற்றிக் கொள்ளுமாறு பல மூத்த தலைவர்கள் கேட்டுக் கொண்ட போதும் ராகுல் காந்தி முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.  எனவே சோனியா காந்தி இடைக்கால தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அவரது பதவி தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.  சுமார் 2 அண்டுகளுக்கு மேலாகக் கட்சியில் முழு நேரத் தலைவர் தேர்வு செய்யப்படாதது குறித்து முத்த தலைவர்கள் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினர்.    தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியை மீண்டும் தலைமை பொறுப்பு ஏற்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.  இந்நிலையில் நாளை காலை 10 மணிக்கு டில்லியில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளக் காங்கிரஸ் காரியக் குழு உறுப்பினர்கள் நிரந்தர அழைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  தற்போதைய அரசியல் நிலவரம், உள்கட்சி தேர்தல், அடுத்த வருடம் நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.  இந்த கூடடத்தில் முக்கியமாக முழு நேரத் தலைவர் குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.