சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாளை ஸ்பெயினில் இருந்து சென்னைக்கு திரும்புகிறார்
கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி அரசுமுறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டு ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றார். அவர் தனது பயணத்துக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ”தி.மு.க. அரசின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டிவிடும் முயற்சிகளில் ஒன்றான உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியாக அமைந்தது. தற்போது 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் சென்று பிப்ரவரி 7 ஆம் தேதி காலை சென்னை திரும்புகிறேன். ஸ்பெயின் நாட்டு நிறுவனங்களின் முதலீடு பற்றி பயணத்தை முடித்துவிட்டு வந்தபிறகு விளக்கமாகச் சொல்கிறேன்” என்று கூறியிருந்தார்.
முதல்வர் தனது பயணத்தின்போது ஸ்பெயினில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களைத் தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். உலகளவில் சரக்குகளைக் கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஹபக் லாய்டு நிறுவன நிர்வாக இயக்குநர்களைச் சந்தித்துப் பேசி அதன் காரணமாக ரூ.2 ஆயிரத்து 500 கோடி முதலீட்டில் தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைக்க அந்த நிறுவனம் முன்வந்துள்ளது.
முதல்வர் மு க ஸ்டாலின் சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளையும் ன் சந்தித்து தமிழகத்தின் சாலை கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொண்டார். மேலும் மேட்ரிட் நகரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகளையும் சந்தித்து உரையாடி தமிழகத்தில் உகந்த சூழ்நிலை நிலவுவதால் அங்கு முதலீடு செய்ய வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
நாளை அதாவது 7 ஆம் தேதி ஸ்பெயின் நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். 7 ஆம் தேதி காலை 8.30 மணி அளவில் விமான நிலையம் வந்தடையும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து, தமிழகத்தில் செய்யப்படவுள்ள முதலீடுகள் குறித்த தகவல்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.