சென்னை
நாளையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் 400 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்களைப் பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தவிர குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்குச் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியில் கடந்த 23ம் தேதி வரை 25,72,540 முதல் தவணை தடுப்பூசிகள், 11,07,473 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 36,80,013 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 1,409 நபர்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 1,187 முதல் தவணை தடுப்பூசியும், 222 இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதைச் செயல்படுத்தும் வகையில் நாளை மாநகராட்சியின் சார்பில் ஒரு வார்டிற்கு 2 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் என மொத்தம் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொஎரோனா தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 200 சிறப்பு முகாம்கள் அந்தந்த வார்டில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் (அ) சமுதாய நல மருத்துவமனைகள் (அ) மினி கிளினிக்குகள் (அ) வார்டு அலுவலகங்கள் (அ) பகுதி அலுவலகங்கள் (அ) பள்ளிகள் போன்ற ஏதேனும் ஒரு இடத்தில் நடத்தப்பட உள்ளது. மேலும், 200 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு வார்டிலும் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட உள்ளன.
ஆகவே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் நாளை தங்கள் பகுதிகளில் நடைபெறும் தடுப்பூசி சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துக் கொண்டுள்ளது.