சென்னை: தமிழகத்தில் 22-வது தடுப்பூசி முகாம்  வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளதாக கூறிa அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாளை பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும், இதுவரை மாநிலம் முழுவதும்  9.71 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள  கிண்டி கிங்ஸ் கொரோனா அரசு மருத்துவமனையில்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தி யாளர்களை சந்தித்தவர், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. டெல்டா மற்றும் ஒமைக்ரானால் 350 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு, சிகிச்சை  அளிக்கப் பட்டு குணமடைந்தனர் என்று கூறியதுடன், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில்  4 சதவீதம் பேருக்கு மட்டுமே மருத்துவ மனையில் சிகிச்சை வழங்கப்படுவதாகவும், 7 சதவிகிதம்பேர் ஆக்சிஜன் சிகிச்சையில் இருப்பதாகவும்,  7 சதவிகிதம் பேர்  தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் இளம் சிறார்களில் 80.4 சதவீதம் பேருக்கு முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது.  நாளை பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதையடுத்து வரும்  சனிக்கிழமை (12ந்தேதி)  22-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

மாநிலம் முழுவதும் இதுவரை  7.59 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.  மீதமுள்ள 1.5 லட்சம் பேர் நாளை நடைபெறும் முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகத்தில் இதுவரை 9.71 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்தில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை அடைவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.