சென்னை,
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நாளை முழ அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
இதன் காரணமாக நாளை தமிழகம் ஸ்தம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த திமுக அழைப்பு விடுத்திருந்தது.
இந்த போராட்டத்துக்கு திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது. அது மட்டுமின்றி, கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கமும், விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்க பேரவையும் முழு அடைப்புக்கு முழு ஆதரவை அளித்துள்ளன. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படும்.
அதுபோல் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை பால் சப்ளை கிடையாது என்று பால் முகவர்கள் அறிவித்து உள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட் நாளை மூடப்படும் என்று கோயம்பேடு வணிகர்கள் அறிவித்து உள்ளனர்.
தமிழக ஓட்டல்கள் சங்கமும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து ஓட்டல்கள் மூடப்படுவதாக தெரிவித்து உள்ளன.
அதுபோல நாளை ஒரு நாள் படப்பிடிப்பு ரத்து செய்யப்படும் என தமிழக திரையுலகம் அறிவித்து உள்ளது. தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு நடிகர் சங்கமும் தனது ஆதரவை தெரிவித்து உள்ளது. அதுபோல தியேட்டர்களில் பகல் காட்சிகளும் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதிமுகவை தவிர அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் கலந்துகொள்கின்றன. இதன் காரணமாக பஸ்கள் இயக்கப்படுவது சந்தேகம்.
அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் 4 லட்சம் லாரிகள் நாளை ஓடாது என்று லாரி உரிமை யாளர்கள் சங்கமும், 65 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது என்று மணல் லாரி சங்கமும் அறிவித்து உள்ளது.
நாளை ஆட்டோ, கால் டாக்சி ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவாள நாளை தமிழகம் முழுவதும் பந்த் நடைபெறுவதால், பொதுமக்கள், தொழிலாளர்கள் ஆதரவு தர வேண்டும் என்று திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.