சென்னை

நாளை தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல்கள் மற்றும் 28 மாவட்டங்களுக்கு இடைக்கால தேர்தல்கள் 6 (நாளை) மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன.

கடந்த 15 ஆம் தேதி இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 3,346 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 80,819  வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வரும் 6 ஆம் தேதி அதாவது நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் 17,130 காவல்துறையும், 3,405 ஊர்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.

நேற்று மாலை 5 மணிக்குப் பிறகு தேர்தல் நடைபெறும் பஞ்சாயத்துகளில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனரா என்பதை காவல்துறை அதிகாரிகள் தீவிரமாகச் சோதனை செய்தனர். திருமண மண்டபம், விடுதிகளில் தீவிர சோதனை நடைபெற்றது. சில சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் போலீசார் விசாரணையும் மேற்கொண்டனர்.

வாக்குப் பதிவு நாளை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். இறுதி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பார்கள். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து வாக்களிக்கச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வாக்குப்பதிவுக்குத் தேவையான வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள், மை, அரக்கு உள்ளிட்ட பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நேற்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் 9 மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள்/ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், அனைத்து வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமரா அமைப்பது அல்லது வீடியோ ஒளிப்பதிவு செய்வது அல்லது இணையவழி வீடியோப்பதிவு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இந்த கடைகள் நாளை (6ம் தேதி) நள்ளிரவு 12 மணி வரை மூடப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் தடையை மீறி மதுபானங்கள் கொண்டு செல்வதையும், விற்பனை செய்வதையும் தடுக்க தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.