சென்னை: அன்றாட உணவுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி விலை, விண்ணைத்தொடும் வகையில் உயர்ந்துள்ளதால், தமிழக அரசு சார்பில், முதல்கட்டமாக இன்றுமுதல் சென்னையில் உள்ள ரேசன் கடை மற்றும் நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் மொத்தம்  82 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கி உள்ளது.

தமிழ்நாட்டிற்கு காய்கறி, மளிகை பொருட்கள் வரத்து குறைவாக இருப்பதால், உணவுப்பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்,  தக்காளி மற்றும் காய்கறிகள் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம்  நேற்று (3ந்தேதி) அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தக்காளி விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றவர், சென்னையில் நாளை (இன்று)  முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, இன்று முதல்கட்டமாக சென்னையில் 3 பகுதிகளில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட வருகிறது. வடசென்னையில் 32 ரேஷன் கடைகளில், மத்திய சென்னையில் 25, தென் சென்னையில் 25 என மொத்தம் 82 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியுள்ளது. மக்கள் அருகில் உள்ள தக்காளி விற்கப்படும் எந்த ரேஷன் கிடைக்கும் சென்று பணம் கொடுத்து தக்காளி வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கடையிலும் 50 கிலோ முதல் 100 கிலோ வரை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.