சென்னை:
தக்காளி விலை சில்லறை விலையில் ரூ.200ஐ எட்டுவதால் பொது மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
தக்காளி விலை கடந்த சில தினங்களாகவே மீண்டும் அதிகரிக்க தொங்கியுள்ளது. நேற்று முன் தினம் வரை 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை இன்று 170 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்க்கப்பட்டு வருகிறது.
தங்கத்தைப்போன்று தக்காளி விலையும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தக்காளியை வாங்க முடியாமல் பொதுமக்கள் தினந்தோறும் திணறி வருகிறார்கள். சமையலில் முக்கியமாக தேவைப்படும் பொருளாக இருப்பது தக்காளியாகும், தக்காளி சாதம் வாங்கும் விலைக்கு பிரியாணி வாங்கலாம் என்றும்,
தக்காளிக்கு பதிலாக ஆப்பிள் வாங்கலாம் எனவும் அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வரும் நிலை உருவாகியுள்ளது. கடந்த மாதம் முன்பு வரை ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது தக்காளி விலையானது சர சர வென அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒரு கிலோ தாக்காளி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சதம் அடித்தது.
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக 140 ரூபாய்க்கும் சில்லரை மார்க்கெட்டில் 160 ரூபாய்க்கும் தக்காளி விற்கப்பட்டது. . தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் 170 முதல் 180 ரூபாய்க்கும், வெளி சந்தையில் 200 ரூபாய்க்கும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கிலோ கணக்கில் தக்காளி வாங்கிய நிலை மாறி எண்ணிக்கையில் தக்காளி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இன்று பல்வேறு வீடுகளில் தக்காளி இல்லாமல் சமையல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஓட்டல்களிலும் தக்காளி கொண்டு செய்யப்படும் உணவு வகைகளான தக்காளி சாதம், தக்காளி சட்னி, காரத்தொக்கு உள்ளிட்டவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆந்திரா, கர்நாடகா பகுதி விவசாயிகளுக்கு தக்காளி விளைச்சலுக்கு சரியான விலை கிடைக்காததால் அவர்கள் மாற்று விவசாயத்தை செய்ய தொடங்கி விட்டனர்.
அதன் காரணமாகவே தக்காளி உற்பத்தி குறைந்து விட்டதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தைக்கு முன்பு தக்காளி 50 முதல் 80 வண்டிகளில் வரும், தற்பொழுது விளைச்சல் குறைவு என்பதால் 20-30 வண்டிகள் வரை மட்டுமே வருகின்றது. இன்று கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மதனபள்ளி, கர்நாடகா சிக்மங்ளூரூ, கோலார், ஒட்டப்பள்ளி, ஆகிய பகுதியில் இருந்து 400 டன் மட்டுமே வருகை தந்துள்ளது. இதன் காரணமாகவே தாக்காளி விலை பல மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.