சென்னை: தக்காளி வரலாறு காணாத விலை உயர்ந்துள்ளது. சாதாரண கடைகளில் கிலோ ரூ.160ம், அரசு விற்பனை நிலையங்களில் ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கோயம்பேடு மொத்த விலைக்கடைகளில் தக்காளி கிலோ ரூ.130க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, ஏரி குளங்கள் நிரம்பியதும், ஏரிகள் நிறைந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரால் வேளாண் பயிர்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழ்நாட்டுக்கு வெளி மாநிலங்களில் இருந்து வரும் காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், காய்கறிகளின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.
சென்னை உள்பட தமிழ்நாட்டுக்கு தேவையான தக்காளி, அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வந்துகொண்டிருந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக தக்காளி பெருவாரியாக சேதமடைந்ததுடன், வரத்தும் குறைந்தது. இதனால், சென்னையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் நாட்டு தக்காளி விலை ஒரு கிலோ ரூபாய் 130 க்கு விற்பனையாகிறது. ஆனால் சாதாரண சில்லரை விலை கடைகளில் தக்காளி கிலோ ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெங்காயம் கிலோ ரூ.40 முதல் 70 வரை விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூரு தக்காளி ரூபாய் 140 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற காய்கறிகளான பீன்ஸ் கிலோ 90 ரூபாய்க்கும், முருங்கைக்காய் கிலோ 120 ரூபாய்க்கும், அவரைக்காய் ரூபாய் 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறி விலையேற்றத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பண்ணைப் பசுமை கடைகளில் மீண்டும் காய்கறி விற்பனையை தொடங்கி உள்ளது. அங்கு தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூபாய் 79 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை உட்பட பிற மாவட்டங்களில் உள்ள 65 பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது.
பசுமை கடைகளில் விற்க ஒரு நாளைக்கு 15 டன் தக்காளியை கொள்முதல் செய்ய கூட்டுறவுத் துறை திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.