தக்காளி விலை நாடு முழுவதும் கடுமையான விலையேற்றத்தை சந்தித்து வருகிறது.

சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 140 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் ஒரு கிலோ தக்காளி 220 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தவும் அதன் விற்பனையை ஒழுங்குபடுத்தவும் பல மாநிலங்களில் செயல்படும் மத்திய கூட்டுறவு சங்கங்களான (Multi State Cooperative Societies – MSCS) நாபெட் (NAFED) மற்றும் என்.சி.சி.எப். (NCCF) ஆகியவற்றை கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு களத்தில் இறக்கியது.

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற தக்காளி அதிகம் விளையக்கூடிய மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து தேவை அதிகமுள்ள மாநிலங்களில் நாபெட் மற்றும் என்.சி.சி.எப். கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது.

மத்திய கூட்டுறவுத் துறையின் இந்த அறிவுரையை அடுத்து களத்தில் இறங்கிய நாபெட் மற்றும் என்.சி.சி.எப். தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்து டெல்லி மற்றும் பீகார் தலைநகர் பாட்னாவில் கிலோ ரூ. 90 என்ற சலுகை விலையில் விற்பனை செய்து வருகிறது.

ஏற்கனவே தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ. 60 க்கு விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.