மும்பை
வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து சிகரெட் பாக்கெட்டுகளில் புகையிலை பழக்கத்தை நிறுத்த உதவி செய்யும் கட்டணமில்லா தொலைபேசி எண் (TOLL FREE NUMBER) அச்சிடப்பட உள்ளது.
பொதுமக்கள் புகையிலைப் பழக்கத்தை நிறுத்த அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக குட்கா சட்டரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆயினும் சட்ட விரோதமாக பல இடங்களில் குட்கா விற்பனை நடைபெறுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் புகையிலைப் பழக்கத்தை நிறுத்த விரும்பும் பொதுமக்களுக்கு உதவ ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக சிகரெட் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட வேண்டியவைகள் குறித்து அரசின் சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”ஒவ்வொரு சிகரெட் பாக்கெட்டுகளிலும் சில விவரங்கள் அச்சடிக்கப்பட வேண்டும். “புகையிலை புற்று நோயை உருவாக்கும்” எனவும், “புகையிலை வலியுடன் கூடிய மரணத்தை அளிக்கும்” எனவும் சிகப்பு பின்னணியில் வெள்ளை நிறத்தில் அச்சடிக்கப் பட வேண்டும், மேலும், “புகையிலைப் பழக்கத்தை நிறுத்த 1800 11 2356 என்ற எண்ணை அழைக்கவும்” என கருப்பு பின்னணியில் வெள்ளை நிறத்தில் அச்சடிக்கப்பட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த உத்தரவு வரும் செப்டம்பர் முதல் அமுலுக்கு வருகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.