சென்னை: சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
ஏற்கனவே பல சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு ஏப்ரல் 1ந்தேதி முதல் அமலுக்கு வரும் நிலையில், தற்போது மேலும் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு இரண்டு முறை சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் ”இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 26 சுங்கச் சாவடிகளிலும் மற்றவற்றில் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம்.
அதன்படி, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டது.
பரனூரில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ரூ.5 முதல் 10 வரை உயர்ந்துள்ளது. ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயண கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.60 முதல் ரூ.190 வரை உயர்த்தப்பட்டு உள்ளது .
. இதுபோக தமிழ்நாடில் மேலும் 20 சுங்கச்சாவடிகளைத் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த 2 ஆண்டுகளில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது. மொத்தமாக 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு-சென்னை விரைவுச் சாலையில் 6 டோல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன. விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3 டோல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன., விக்கிரவாண்டி – நாகை நெடுஞ்சாலையில் 3 டோல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன. ஓசூர்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3 டோல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன. சித்தூர்-தச்சூர் விரைவுச் சாலையில் 3 டோல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன. மகாபலிபுரம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 டோல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 20 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப் படும் என்று கூறப்பட்டு உள்ளது. அதுபோல, அதிமுக அறிக்கையிலும் இதே விஷயம் கூறப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் மத்திய பாஜக அரசு கூடுதல் டோல் கேட் அமைக்க முடிவு செய்துள்ளதுள்ளதுடன், டோல் கட்டணத்தையும் உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.