ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான முதல் இந்திய வாள் வீச்சு போட்டியாளர் என்ற பெருமையுடன் டோக்கியோ சென்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை பவானி தேவி வாள் வீச்சு போட்டியில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
சென்னை தண்டயார்பேட்டையில் உள்ள முருகு தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பவானி தேவி, பதினோறு வயதில் ஆறாம் வகுப்பு சேர்ந்தது முதல் வாள் பயிற்சி பெற்றுவந்தார்.
வாள் பயிற்சி என்ற ஒன்று தமிழகத்தில், சென்னையில் உள்ளதா என்றே யாரும் தெரிந்திராத நேரத்தில் 2004 ம் ஆண்டு முதல் பயிற்சி பெற்றுவந்த பவானி தேவி, ஆரம்பத்தில் வேறு விளையாட்டு ஏதும் இல்லாத காரணத்தால் தான் இதைத் தேர்ந்தெடுத்தேன், பின்னர் வாள் வீச்சில் எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது என்று கூறியிருந்தார்.
காமன்வெல்த் போட்டிகளில் வாள் வீச்சில் தங்கம் வென்ற பவானி தேவி, அந்தப் போட்டியில் 44 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்.
இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிக்கு இதுவரை எந்த போட்டியாளரும் வாள் வீச்சுப் போட்டிக்கு தேர்வாகாத நிலையில், முதன் முதலாக வாள் வீச்சுப் போட்டியில் கலந்து கொண்ட 27 வயதான தமிழக மின்வாரிய ஊழியரான பவானி தேவி, தனது முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கிறார்.