டோக்கியோ:
2020 ஒலிம்பிக்ஸ் விழா இன்றுடன் நிறைவு பெற்றது.

சர்வதேச தொடரில் மிகவும் பிரமாண்டமான மதிப்புமிக்க தொடராக இருந்து வரும் ஒலிம்பிக்ஸ் தொடர் இம்மாதம் ஜூலை 23ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

போட்டிகள் தொடங்கிய முதல் நாளிலேயே பளுதூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி வென்றார். அதற்குப் பின் பி.வி. சிந்து தான் வெண்கலம் வென்று பதக்க கணக்கை துவக்கி வைத்தார். ஒருவர் பின் ஒருவராக இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்தனர்.

மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றார். ஒலிம்பிக்கில் முதல் தங்கத்தைப் பெற்றுக்கொடுத்தார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. இதனால் பதக்க தரவரிசையில் இந்தியா 20 இடங்கள் முன்னேறி 48ஆவது இடத்திற்குச் சென்றது. இறுதி நாளான இன்று அமெரிக்கா அதிகம் பதக்கங்களை வாங்கியதால் சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது.

அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்கள் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியது. இன்று மட்டும் அமெரிக்கா 3 தங்கம் பெற்றது. 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் சீனா 2வது இடம் பிடித்தது. போட்டியை நடத்தும் நாடான ஜப்பான் 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 58 பதக்கங்களை ஜப்பான் கைப்பற்றி மூன்றாம் இடத்தில் உள்ளது. ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் இந்தியா 48வது இடத்தில் உள்ளது.

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் நிறைவு விழா தொடங்கியது. இந்திய அணிக்கு மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றார். போட்டி நிறைவு விழா முடிவில் அடுத்த ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடான பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தகது.

அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி முதல் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.