டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 ம் தேதி துவங்க இருக்கிறது, போட்டி துவங்க இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது, இந்த நிலையில் மைதானங்களும் மருத்துவமனைகளும் ஒரே நேரத்தில் தயாராகி வருவது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

10,000 பார்வையாளர்களை மட்டுமே அனுமதிப்பது என்று ஏற்கனவே முடிவெடுத்திருக்கும் நிலையில், கொரோனா பரவல் அதிகரித்தால் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு ஏற்ப ஏற்கனவே முடிவுசெய்ததில் இருந்து 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிப்பது அல்லது பார்வையாளர்களே இல்லாமல் கூட போட்டியை நடத்தி முடிப்பது என்று முடிவெடுத்திருக்கிறது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.

போட்டியில் பங்கேற்பதற்காகவும், கண்டு ரசிக்கவும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்களும் ரசிகர்களும் டோக்கியோ வந்தவண்ணம் உள்ளனர்.

இதனால், ஜப்பானில் இதுவரை 13.8 சதவீத மக்களுக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போட்டிருக்கும் நிலையில், தடுப்பூசி போடப்படாத இளம் வயதினர் மற்றும் முதியவர்களுக்கு நோய் தொற்று அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் 45 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும் நிலையில், ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதே குறைந்த அளவு மக்களுக்கு தடுப்பூசி போட காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் சராசரியாக 11.3 சதவீத மக்களுக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜப்பான் நாட்டு விமான நிலையங்களில் முறையான பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக இங்கு வந்துள்ள உகாண்டா மற்றும் செர்பியா நாட்டு வீரர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜப்பான் அதிபர் சுகா டோக்கியோ விமான நிலையத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.

தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஆகஸ்ட் 8 ம் தேதி போட்டி முடிவதற்குள் தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு தொற்று பரவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் உள்ளிட்ட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.