டில்லி:

விஹெச்பி அகில உலக தலைவராக 2003ம் ஆண்டு முதல் இருந்து வந்த பிரவீன் தொகாடியாவின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. சமீபகாலமாக பிரதமர் மோடிக்கும் தொகாடியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஒரு வழக்கில் தொகாடியாவை ராஜஸ்தான் போலீஸ் குஜராத்தில் வலை வீசி தேடிய சம்பவமும் நடந்தது. இதனால் யாரும் தெரியாமல் தொகாடியா தலைமறைவாக வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது தான் தொகாடியாவுக்கும், மோடிக்கும் இடையிலான பூசல் வெளியுலகத்திற்கு தெரியவந்தது.

இந்நிலையில் விஹெச்பி அகில உலக தலைவர் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் இமாச்சல் பிரதேச மாநில முன்னாள் கவர்னர் சாதாசிவ் கோக்ஜே 161 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தொகாடியா சார்பில் போட்டியிட்ட ராகவ் ரெட்டி 60 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

இதில் தொகாடியா போட்டியிடவில்லை. 52 ஆண்டுகளில் முதன் முறையாக தற்போது தான் தேர்தல் நடந்துள்ளது. இதன் மூலம் விஹெச்பி.யில் இருந்து வெளியேறுவதாக தொகாடியா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் பிரதமர் மோடி குறித்து குறிப்பிடுகையில், ‘‘நல்ல நண்பர் ஒரு காலத்தில்’’ என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் தொகாடியா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்துக்கள் உரிமைக்காக 17ம் தேதி முதல் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்படும். இந்துக்கள் உரிமை, காஷ்மீரி பண்டிட்கள் மறுவாழ்வு, விவசாயிகள் பிரச்னைகாக போராட்டம் நடத்தப்படும். எனது ஆதரவாளர்கள் அமைதி காத்து ஜனநாயக முறையில் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். பெரிய அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்கவும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பில் பிளவு ஏற்படுத்த முயற்சித்தாக தொகாடியா மீது புகார் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.