டில்லி

குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக இன்று டில்லி மெட்ரோவில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார்.

இன்று டில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு திரௌபதி முர்மு மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும்.

டில்லி மெட்ரோவில் பயணம் செய்த 2-வது இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012 -இல் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.

திரவுபதி முர்முவின் மெட்ரோ ரயில் பயணம் குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜனாதிபதி திரௌபதி முர்மு டெல்லி மெட்ரோவில் பயணம் செய்தார். தனது பயணத்தின்போது அவர் பள்ளி மாணவர்களுடன் உரையாடினார்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று டெல்லி மத்திய செயலக மெட்ரோ நிலையம் (கேட் எண் 4) மற்றும் அம்ரித் உதயான் (கேட் எண் 35) இடையிலான பேருந்து சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த பிறகு மத்திய செயலக மெட்ரோ நிலையத்தில் மெட்ரோ ரயிலில் ஏறிய அவர், நேரு பிளேஸ் மெட்ரோ நிலையம் வரை பயணித்து பின்னர் மத்திய செயலகத்திற்குத் திரும்பினார்.

பயணத்தின்போது டில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விகாஸ் குமார் திரவுபதி முர்முவுடன் இருந்தார். தனது பயணம் குறித்து பார்வையாளர் புத்தகத்தில் கருத்து பதிவிட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, டெல்லி மெட்ரோ நிர்வாகத்திற்குப் பாராட்டு தெரிவிப்பதாகவும், தனது பயணம் இனிமையாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.