ஒரிசா மாநில சட்டமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது.

உலக புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்தில் புழுங்கல் அரிசி கலந்ததாக பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த ஆளும் பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கடந்த 2020ம் ஆண்டு 5 வயது பெண் குழந்தை கொலை விவகாரத்தில் பிஜு ஜனதா தள கட்சியினர் மீது பாஜக-வினர் கூறிய குற்றச்சாட்டு பொய் என்று நிரூபணம் ஆனதால் பாஜக தலைவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.

பெண் குழந்தை கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நேற்று இறுதி தீர்ப்பு வெளியான நிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியினர் இன்று இதனை அவையில் எழுப்பினர்.

இந்த நிலையில் பூரி ஜெகந்நாதர் கோயிலில் பிரசாதம் வழங்குவதற்காக ஒரிசா முழுவதும் இருந்து பொதுமக்களிடம் அரிசி பெறப்பட்டது.

பல ரக அரிசி ஒன்றாக கலந்து இருப்பதால் இதில் பிரசாதம் செய்யக்கூடாது என்றும் குறிப்பாக புழுங்கல் அரிசியில் பிரசாதம் செய்யக்கூடாது என்றும் பாஜக கட்சியினர் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருவதோடு ஒரிசா அரசு பக்தர்களின் உணர்வோடு விளையாடுவதாக குற்றம்சாட்டி இருந்தது.

இந்த நிலையில் பூரி ஜெகந்நாதர் கோயில் பிரசாத விவகாரத்தை சட்டமன்றத்தில் எழுப்பி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர் அப்போது ரெங்கலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நவுரி நாயக் சபாநாயகரின் இருக்கை அருகே சென்று அவரது மைக்கை உடைத்தார்.

ஒரிசா சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிஜு ஜனதா தளம் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.