இன்றைய முக்கிய வர்த்தகச் செய்திகள் (22.12.2017)
1. சர்வதேச நாணய நிதியம் (International monitary fund) தனது ஆய்வு அறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கிக்கு மேலும் சுதந்திரம் அளிக்க வேண்டும் எனக் கூறி உள்ளது. அப்படி அளிப்பதன் மூலம் வங்கிகளை கண்காணிப்பது மற்றும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளின் இயக்குனர்களை நீக்குவது அல்லது புதிய இயக்குனர்களை பணி அமர்த்துவது போன்றவைகளை எந்த ஒரு இடைஞ்சலும் இன்றி செய்ய முடியும். அது மட்டும் இன்றி கடன் வழங்குவதிலும் கட்டுப்பாடுகள் நியமிக்க அதனால் வங்கிகள் திவாலாவதை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளது.
2. ஊசிகள் மற்றும் சிரிஞ்சுகளின் விலை குறைகிறது. தற்போது மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் விலைகளை அரசு கண்காணித்து வருகிறது. அதனால் அவைகளை அதிக லாபத்தில் விற்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பல மருந்துகளின் விலை குறைய உள்ளது. ஊசிகள் மற்றும் சிரிஞ்சுகள் 75% லாபத்தில் தற்போது விற்பனை செய்யப்படுகின்றது. அவைகளின் லாபம் இனி குறைக்கப்படும் என்பதால் விலையும் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. அத்துடன் இந்த விலை குறைவால் ஏற்கனவே தொழிற்சாலைகளில் தங்கி உள்ள ஊசிகள் மற்றும் சிரிஞ்சுகள் உடனடியாக விற்றுத் தீரும் என எதிர்பார்க்கப் படுகிறது
3. பிட் காயின்களுக்கு மதிப்பில்லை என சர்வதேச பொருளாதார சேவை மையம் மோர்கன் ஸ்டான்லி அறிவித்துள்ளது. ”பிட் காயின் எந்த விதத்திலும் ரொக்கப் பரிவர்த்தனைக்கு சமம் ஆகாது. அதை கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு என்னும் வரிசையில் இணைக்கப்பட முடியாது. உலகிலுள்ள மிகப் பெரிய இணைய வர்த்தகர்கள் 500 பேரில் மூவர் மட்டுமே பிட்காயின்கள் மூலம் பரிவர்த்தனை நடத்த தற்போது ஒப்புதல் அளித்துள்ளனர். கடந்த 2016ஆம் வருடம் 5 ஆக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது மூன்றாகி உள்ளது. எனவே பிட் காயின் தனது மதிப்பை இழந்து விட்டது” என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
4. சுமார் 7400 மெகா ஹெட்ஸ் க்கும் அதிகமான அளவு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை அரசிடம் உள்ளது. நேற்று பாராளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா, “தற்போது அரசிடம் 7446 மெகா ஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உள்ளது. அவற்றை உபயோகப் படுத்திக் கொள்ள மொபைல் நிறுவனங்களிடம் விரைவில் டெண்டர் கோர உள்ளது. தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் விரைவில் இதற்கான விலை மற்றும் ஏல விதி முறைகளை அறிவிக்க உள்ளது. அதன் பிறகு ஏலத்தில் விடப்படும்” என தெரிவித்துள்ளார்.
5. மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் ரூ.2860.18 கோடி ரூபாய் விற்பனை வரி வியாபாரிகளிடம் இருந்து செலுத்தப் படாமல் உள்ளது. இது குறித்து மகாராஷ்டிரா சட்ட சபையில் அம்மாநில நிதி மைச்சர் சுதிர், “பல வர்த்தகர்கள் அரசுக்கு அறிவிக்காமல் தங்களின் வர்த்தகங்களை மூடி விட்டனர். வேறு சிலர் தங்கள் வர்த்தக இடங்களை அறிவிப்பு இன்றி மாற்றி விட்டனர். அதன் மூலம் அரசுக்கு வர வேண்டிய விற்பனை வரி பாக்கி ரூ.2860.18 கோடி இன்னும் வரவில்லை. ரூ. 5 லட்சத்துக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ள வர்த்தகர்களை வங்கிகள் மற்றும் காவல் துறை உதவியுடன் தேடி வருகிறோம். விரைவில் இந்தத் தொகை வசூலிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
6. வங்கிகளில் உள்ள செயல்படாத சொத்துக்களை அதிகம் ஆக்குவதால் அபாயம் ஏற்படும் என இந்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. வங்கிகளின் வாராக் கடன் செயல்படாத சொத்துக்கள் என்னும் இனத்தில் மாற்றப்படுவதால் வங்கிகளுக்கு மேலும் சுமை ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த காலாண்டில் வாராக் கடன் 10.8% இருந்தது தற்போது 11.1% ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் வங்கியில் முதலீடுகள் தேவை இல்லாமல் முடங்கி விடுவதையும் அது சுட்டிக் காட்டி உள்ளது. தற்போது வங்கிகளின் மொத்தக் கடன் தொகை 41% ஆக உள்ளதால் வங்கிகளுக்கு அன்றாடத் தேவைகளுக்கு பணம் இல்லாமல் போகும் நிலை ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
7. கொண்டைக்கடலை மற்றும் மசூர் பருப்புக்கு இந்திய அரசு 30% இறக்குமதி வரி விதித்துள்ளது. இந்தியாவில் பருப்புகள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூர் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர் அதனால் இந்த வரி விதிப்பை அறிவித்துள்ளதாக அரசு தெரிவிக்கின்றது. ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் தான்சானியாவில் இருந்து கொண்டைக்கடலை இறக்குமதி செய்யப்படுகின்றது. மசூர் பருப்பு கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.