இன்றைய வர்த்தகச் செய்திகள் (16/10/2017)
1. அரசுத்துறை நிறுவனமான சோலார் எனர்ஜி கார்பொரேஷன் ஆஃப் இந்தியா இரு ஏலங்களை விட்டு இருந்தது.. அதன் மூலம் காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் சுமார் 3GW அளவுக்கு வாங்க உள்ளது. இதன் மூலம் ஒரு யூனிட் ரூ.3.46க்கு வாங்கப்பட்ட மின்சாரம் விலை குறைந்து ரூ.2.64 க்கு வாங்கப்படும் என தெரிய வந்துள்ளது. மேலும் இதே போன்று மேலும் 2 அல்லது மூன்று ஏலங்களை விடுவதன் மூலம் மின்சாரம் வாங்குவது அதிகரிக்கப்படும் என தெரிகிறது.
2. கச்சா எண்ணெய் விலைக் குறைவை தொடர்ந்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் செய்யும் முதலீடு 98% குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 434 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலேயே முதலீடுகள் வந்துள்ளன. சென்ற வருடம் இதே காலகட்டத்தில் 3.84 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடாக வந்துள்ளது. இந்த முதலீட்டுக் குறைவு கேரளா, உத்திரப் பிரதேசம் மற்றும் பிகாரை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் அதிகம் காணப்படுகிறது.
3. விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதால் விமான நிலைய விரிவாக்கம் அவசியமாகி வருகிறது. அதனால் விரிவாக்கச் செலவுகள் இன்றியமையாதவை ஆகிவருகிறது. இந்தியா வரும் 2030க்குள் 500-600 மில்லியன் பயணிகளை எதிர்பார்ப்பதால் அதிகப்படியான வசதிகளுக்காக 45 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்ய நேரிடும். மேற்கூறிய தகவல் களை மத்திய ஆசிய விமானத்துறை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
4. உச்ச நீதிமன்றம் சமீபத்தில் டில்லியில் பட்டாசுகள் விற்கத் தடை விதித்தது. இதனால் அகில இந்திய வியாபாரிகள் சங்கம் டில்லியில் சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள பட்டாசுகளின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதனால் அரசு இந்த தொகையை இழப்பீடாக அளிக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
5. ஜி எஸ் டி ஒரு ஸ்திரமான நிலைக்கு வர சுமார் 5 அல்லது ஆறு மாதங்கள் ஆகும் என மத்திய வருமானத்துறை செயலர் ஹஸ்முக் ஆதியா கூறி உள்ளார். கணக்கு சமர்பித்தல், வரி விகிதங்கள் மாற்றத்தை உடனுக்குடன் அமுல் படுத்துதல் போன்றவைகள் அனைத்துமே ட்ரையல் அண்ட் எர்ரர் முறையில் நடை பெறுவதாகவும் அதனால் கணக்கு சமர்ப்பிக்காதவர்கள் பலர் கணக்கை குறித்த நேரத்தில் சமர்ப்பிக்க முடிவதில்லை எனவும் கூறி உள்ளார். மேலும் பல வர்த்தகர்களுக்கு இந்த புதிய முறை சரியாக புரியாததால் அவர்கள் வேண்டுமென்று கணக்கு சமர்ப்பிக்காமல் இல்லை எனவும் புரிந்த பின் ஒழுங்காக சமர்ப்பிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.