இன்றைய வர்த்தக செய்திகள்
1. பங்குச் சந்தை வர்த்தகக் கட்டுப்பாட்டு நிறுவனமான செபி பங்கு வர்த்தகத்தில் முறைகேடுகள் செய்தமைக்காக்கவும், சரியாக பதிவு செய்யாமல் பங்கு வர்த்தகம் செய்ததாலும் ரூ. 15 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதில் ரூ.10 லட்சம் பங்கு வர்த்தகத்தில் செய்த முறைகேடுகளுக்காகவும், ரூ.5 லட்சம் செபியின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு புறம்பாக நடந்ததாலும் அபராதம் விதிக்கப்பட்டதாக செபி கூறி உள்ளது. இந்த முறைகேடுகல் ஆர் எம் மொஹித் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் அட்லாஸ் சைக்கிள் (அரியானா) பங்குகள் வர்த்தகத்தை சோதனை இட்ட போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
2. இந்திய அரசு சவரன் கோல்ட் பாண்ட் என்னும் தங்கப் பத்திரங்கள் விற்பனையை வடநாட்டுப் பண்டிகையான தந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி துவக்க உள்ளது. அக்டோபர் 16-18 வரை நடக்க உள்ள இந்த விற்பனையில் தங்கப் பத்திரங்கள் ஒரு கிராமுக்கு ரூ.2987 என்னும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு ரூ.50 குறைவாக அதாவது ஒரு ரூ.2937 என்ற விலையில் விற்கப்படும்
3. ஏற்றுமதியளர்கள் சுங்கத்துறையில் தெரிவித்திருந்த வங்கி அக்கவுண்டுகளில் ஜி எஸ் டி ரீஃபண்ட் திரும்ப கிடைக்கும் என கலால் மற்றும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது. எனவே வங்கி அக்கவுண்டுகளை உடனடியாக சுங்கத் துறையில் பதியுமாறும், ஜி எஸ் டி கணக்குகளில் அதே வங்கி அக்கவுண்ட் நம்பர்களை தெரிவிக்குமாறும் அந்த துறை ஏற்றுமதியாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இரண்டு எண்களும் மாறுபடாமல் இருந்தால் அந்த வங்கி அக்கவுண்டுகளில் ஜி எஸ் டி ரீஃபண்ட் தொகையை டிபாசிட் செய்ய உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் லிமிடெட் என்னும் நிருவனத்தால் உருவாக்கப்பட்ட யமுனா எக்ஸ்ப்ரஸ் வே என்னும் நொய்டா மற்றும் ஆக்ராவை இணைக்கும் சாலையை அந்த நிறுவனம் குத்தகைக்கு விட உத்தேசித்துள்ளது. அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் தனக்கு சொந்தமான சொத்துக்களை விற்க முயன்றது. ஆனால் உச்சநீதிமன்ற ஆணைப்படி நீதி மன்ற அனுமதி இன்றி சொத்துக்களை எதுவும் செய்ய முடியாத நிலையில் நிறுவனம் உள்ளது. அதனால் இந்த சாலையை குத்தகைக்கு விட நீதி மன்றத்திடம் நிறுவனம் அனுமதி கோரி உள்ளது.
5. காப்பீடு நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளதாக காப்பீட்டு துறை கட்டுப்பாட்டு நிறுவன தலைவர் விஜயன் தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரம் முன்னேற்ற விகிதம் குறைவாக உள இந்த வேளையில் காப்பீடு நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சி விகிதம் ஆயுள் காப்பீட்டுத் துறையில் மிகவும் அதிகமாக உள்ளது. மொத்தத்தில் ஒரு வருடத்தில் 17% வளர்ச்சி அதிகரித்துள்ளது.