ராலேகான் சித்தி:
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவை அமல்படுத்த கோரி மத்திய அரசுக்கு எதிராக உண்ணா விரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் போராட்டம் இன்று 7வது நாளை எட்டி உள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று அன்னா ஹசாரேவை சந்தித்து பேசினார்.
அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது விசாரணை நடத்தும் லோக்பால் சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே சில ஆண்டுகளாக போராடி வருகிறார். ஏற்கனவே உண்ணா விரத போராட்டம் இருந்தபோது, விரைவில் லோக்பால் கொண்டு வரப்படும் என மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி அளித்தது. அதை நம்பி தனது உண்ணாவிரதத்தை கைவிட்ட அன்னா ஹசாரே, மோடி தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி கடந்த ஜனவரி 30ந்தேதி காந்தி நினைவுநாளில், தனது சொந்த கிராமமான மகாராஷ்டிர மாநிலம் ராலேகான் சித்தியில் உண்ணா விரதத்தை தொடங்கினார். அவரது போராட்டம் இன்று 7வது நாளை எட்டியுள்ளது.
அவரது உடல்நிலை சிறிது சிறிதாக நலிவடைந்து வரும் நிலையில், சமூக ஆர்வலர்கள் பலர் அவரை சந்தித்து பேசி வருகின்றனர். உடல்நிலையை கருத்தில் கொண்டு தொடர் உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே முடித்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று அன்னா ஹசாரேவை சந்தித்து பேசினார். அப்போது, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு அன்னா ஹசாரேவிடம் வலியுறுத்தினர். அவருடன் மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன் சிங், பாதுகாப்புத்துறை இணை மந்திரி சுபாஷ் பாம்ரே ஆகியோரும் சென்றிருந்தனர்.